இலங்கையில் இரவு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்

இரவு நேர பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் அதிக கவனம் செலுத்தும் இடங்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் திருத்தம் செய்து தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசிக்கப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றிய சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே,

”இரவுப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இரவுப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவு நேரங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பது உள்ளிட்ட இரவுப் பொருளாதாரத்தை நாடுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% அதிகரிக்க முடியும்.

உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு பொருளாதாரத்தின் பங்களிப்பை எடுத்துக் கொள்கின்றன.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, குடிப்பது உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவதை விரும்புகின்றனர்.

இது கலால் வருவாயை கூட அதிகரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது. ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும், அரசாங்க வருவாயை அதிகரிப்பது அவசியம்.

இரவு பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும், குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், கொழும்பு போன்ற நகரப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

எனவே, இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட, விதிமுறைகளை திருத்தம் செய்து தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin