இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று புதன்கிழமையும் தொடர்ந்துள்ளது.
அரசாங்கத்துடனான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பாரிய கனரக இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலையினை வழங்கக் கோரிய போராட்டம் காரணமாக புதுடெல்லியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேருக்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நெருங்காத வகையில் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.
எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் குறித்த போராட்டம் தாக்கத்தை செலுத்தும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020 தொடக்கம் 2021ஆம் ஆண்டுகளில் சுமார் இரண்டு மாதங்கள் முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.