ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில்,
”அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்புகளின் பயனை இலங்கை மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். விரைவில் மின்சாரக் கட்டணம் குறையவுள்ளது. கிராமிய பொருளாதாரம் அபிவிருத்தியை நோக்கி நகரவுள்ளது.
மக்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தனர். அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும்.
ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் நடத்தாதென்றும், சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த திட்டமிடுவதாகவும் கூறுகின்றனர். அவ்வாறெனின் ஏன் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு தயாராகின்றன என கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது.
நான் பொறுப்புடன் கூறுகிறேன், உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று காட்டுமாறு எதிர்க்கட்சிகளுக்கு சவாலும் விடுகிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிரை காப்பாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திசைதிருப்பிய தலைவரை தவிர வேறு தலைவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.
மக்களை ஏமாற்றி போலி செய்திகளை பரப்ப வேண்டாம். பேசுவதற்கு கருத்துகள் இல்லாமையால் ஜனாதிபதித் தேர்தல் பற்றி பேசுகின்றனர். நாட்டில் அரசியலமைப்பொன்று இருக்கின்றதென தெரியாத முட்டாள்களாக இவர்கள்?. எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.