புதிய அரசியல் கூட்டணி கொழும்பில் நடத்தும் பொதுக்கூட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாட அந்த கூட்டணியின் அரசியல் குழு அண்மையில் கூடியுள்ளது.
சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா,நளின் பெர்னாண்டோ, நிமல் லன்சா, சிறிபால அமரசிங்க, சுகீஷ்வர பண்டார உட்பட கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணியின் அமைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்வரும் 24 திகதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி அண்மையில் ஜா-எலவில் நடத்தி பொதுக் கூட்டத்திற்கு மக்களின் வரவேற்பு கிடைத்துள்ளதால், கொழும்பு மக்கள் மத்தியிலும் பொதுக்கூட்டம் குறித்த பெரிய எதிர்ப்பார்பு இருப்பதாக சுகீஷ்வர பண்டார இதன் போது கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜா-எலவில் நடைபெற்ற கூட்டத்தை பார்த்து தேசிய மக்கள் சக்தி அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூட்டம் நடத்திய இடத்திலேயே புதிய கூட்டணியும் மக்களை திரட்டி கூட்டத்தை நடத்தியதாகவும் வேறு எந்த கட்சிக்கும் பெரும் மக்கள் எண்ணிக்கையுடன் கூட்டத்தை அங்கு நடத்த முடியாமல் போனது எனவும் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பொதுமக்கள் வர மாட்டார்கள் என்பதால்,கொழும்பில் நாங்கள் கூட்டத்தை நடத்த உள்ள ஹைட்பார்க்கில் பொதுக்கூட்டங்களை நடத்த ஏனைய கட்சிகள் தயங்குவதாகவும் எனினும் புதிய கூட்டணி அந்த சவாலை ஏற்றுள்ளதாகவும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நிமல் லன்சா கூறியுள்ளார்.
இந்த நிலையில், அனுர பிரியதர்ஷன யாப்பா,நிமல் லன்சா உள்ளிட்டோர் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலைமையில், கொழும்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மேலும் சில முக்கிய பிரமுகர்களும் சில அரசியல் தலைவர்களும் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாக பேசப்படுகிறது.
மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்,முன்னாள் மேயர்,உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேர் மற்றும் 10 தொழிற்சங்கங்கள் புதிய கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில் ஏறவுள்ளதாகவும் அந்த கூட்டணியின் தகவல்கள் கூறுகின்றன.