மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார் .
இந்த நிலையில் அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
CCTV கமராவில் சிக்கிய ஆதாரம்
சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில் அருகில் இருந்த CCTV கமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற அவலம் இலங்கையில் அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 10,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகளும், சிறுமிகள் பலாத்காரம் தொடர்பான 51 முறைப்பாடுகளும், சிறுவர்களை ஆபாசமான பதிவுகளில் பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களை பயன்படுத்துதல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறை, புறக்கணிப்பு, கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை தொடர்பிலும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் எதிர்கால இலங்கையின் தூண்கள். அவர்களின் பாதுகாப்பு என்பது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.