சட்டவிரோத போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 1,200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரை சோதனையிட்ட போது, பெண் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டது.
குறித்த பெண்ணுக்கு போதைப்பொருள் வழங்கியதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த போதைப்பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட இந்த போதை மாத்திரைகள் காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் போதை மாத்திரைகளை சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.