அண்மையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தன் கண்களால் இன்றும் பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்வி நிறுவன ஊழியரும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி மு.தம்பிராசாவும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஒலிப்பதிவு ஒன்று இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த தனியார் பல்கலைக்கழகத்தினால் நாளைய தினம் இந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற தென்னிந்திய நடிகர் நடிகைகளோடு சந்தித்து புகைப்படம் எடுப்பதற்கு ஒருவருக்கு 30000 ரூபாய் அறவிடப்படும் என குறித்த தனியார் பல்கலைக்கழகத்தினால் அவர்களது உத்தியோகபூர்வ முகநூல் தளத்திலும் ஏனைய அனுசரணை ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விளம்பரத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்திய அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி மு.தம்பிராசா நீங்கள் நடிகைகளோடு படம் எடுப்பதற்கு பணம் வசூல் செய்து எங்கள் இளைஞர்களை திட்டமிட்டு திசைதிருப்ப முற்படுகின்றீர்களா எனவும் யாழ்பாணத்தில் நடிகைகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றீர்களா என்று ஆதங்கத்தோடு கேட்டபோது ஆம் என பதிலளித்துள்ளார்.
இதன்போது தனியார் கல்வி நிறுவன ஊழியர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் தான் தனது நிறுவனத்தின் சம்பளம் வாங்குகின்ற ஊழியர் என்ற அடிப்படையில் நிர்வாகத்தின் பணிப்பு அமையவே செயல்படுவதாக தெரிவித்ததோடு யாழ்பாண விடுதியொன்றில் இரவு களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற போது ஏன் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். யாழ்ப்பாணத்தில் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக பாவிக்கப்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
மற்றும் தான் இருக்கின்ற இடத்தில் என்றும் கஞ்சா விநியோகிக்கப்படுவதை தனது கண்களால் பார்த்தேன் என்றும் இதற்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துகின்ற எம்மை மட்டும் குற்றம் சுமத்தீர்களே என்று அச்சிறுத்தும் பாணியில் பதிலளித்துள்ளார்.
இவ்வாறு அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தனியார் பல்கலைக்கழக ஊழியரும் தொலைபேசியில் உரையாடுகின்ற ஒலிப்பதிவு இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை உண்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த தனியார் நிறுவனம் ஆரம்பத்தில் இலவசமாக இசைநிகழ்வு செய்வதாக அறிவித்து விட்டு தற்போது 25000 ரூபா, 7000 ரூபா, 3000 ரூபா ஆகிய கட்டணங்களில் அனுமதிச்சீட்டு விநியோகிப்பதும் நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கு ஒருவருக்கு 30000 ரூபா அறவிடுவதும் யாழ்ப்பாண மக்களிடம் பெரும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
மேலும் இசை நிகழ்விற்கு அனுமதிச்சீட்டுக்கள் 25000 ரூபா – 500 ம்,
7000 ரூபா – 1000 ம்,
3000 ரூபா – 2000 ற்குமே மாநகரசபையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் புகைப்படம் எடுப்பதற்கு 30000 ரூபா அனுமதிச்சீட்டு வழங்குவதற்கு மாநகரசபையிடம் அனுமதி பெறப்படவில்லை என மாநகர ஆணையாளர் இன்று உறுதிப்படுத்தினார்.