நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது ஆச்சரியப்பட தேவையில்லாத அளவுக்கு இலங்கை சமூகத்தில் சாதாரண விடயமாக மாறியுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தரம் குறைந்த மருந்து கொள்வனவு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, மாளிகாந்த நீதவான் நீதிமன்றத்தினால், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நிலையில், மீண்டும் சிறைச்சாலையின் வைத்தியசாலை தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு பின்னர், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என முன்னதாகவே பலர் ஆரூடம் கூறியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த காலத்தில் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்களவானவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் எத்தனை போர் இதுவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் என்பதற்கான புள்ளிவிபரங்கள் தம்மிடம் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தண்டனை பெற்று சிறைக்கு வருவோரை எவரையும் நாங்கள் கைதிகள் அல்லது சந்தேக நபர்களாகவே பார்க்கின்றோம். அவர்களில் எவருக்கும் சிறப்பு சலுகைகளை வழங்குவதில்லை.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நடைபெற்ற காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அண்மையில் வாகன விபத்தில் பலியான முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க போன்றவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சாதாரண கைதிகளை போல சிறையில் இருந்தனர் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அதேவேளை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்படும் சந்தேக நபரோ அல்லது கைதியோ ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள்.
நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நபர்கள் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், சிறைச்சாலையில் கடமையில் இருக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்துவார்கள். நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரப்படும் கைதிகள் தாக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிவது முக்கியம் என்பதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படும்.
அதேபோல் சிறைக்கு வரும் சந்தேக நபர் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார், சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவர் பரிசோதனை செய்த பின்னர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பரிந்துரைப்பார்.
சில சந்தர்ப்பங்களில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியாது என்றால், தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார். சந்தேக நபர்களோ, கைதிகளே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றாலும் அவர்கள் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழேயே இருப்பார்கள்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை சம்பந்தமாக ஜனாதிபதியின் மன்னிப்பை பெற்றிருந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சம்பந்தமாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவரை சிறைச்சாலை அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் எடுத்தனர். சிகிச்சை முடிந்த பின்னர், அவர் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பீ. திஸாநாயக்க கூறியுள்ளார்.
இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தொடர்பாக சமூகத்தில் காணப்படும் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, நீதிமன்ற செயற்பாடுகள் சம்பந்தமாக பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது முக்கியம் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கை என்ற விடயத்தின் அடிப்படையிலேயே நீதிமன்ற நடவடிக்கைகளை போல், ஆட்சியாளர்கள் எனக்கூறப்படும் தரப்பினரும் தமது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய பிரமுகர்கள் எனக்கூறப்படும் நபர்கள் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சிறைக்கு செல்ல நேரிட்டால், அந்த நபர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது வழமையாக இருந்து வருவதை நாங்கள் கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. இது சிறந்த விடயமல்ல. சிறைச்சாலையில் அடைக்கப்படும் அனைவருக்கும் இ்நத வசதிகள் கிடைக்காது என்பதே இதற்கு காரணம்.
மேலும் சிறையில் அடைக்கப்படும் எவராக இருந்தாலும் அந்த நபருக்கு சிகிச்சை பெற வேண்டிய நோய் இருக்கின்றது என சிறைச்சாலை வைத்தியசாலையில் மருத்துவர் பரிந்துரைத்தால் அந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
ஆனால், முக்கிய பிரமுகர்கள் எனக்கூறப்படும் நபர்கள் சிறந்த உடல் நலத்துடன் இருந்தாலும் சிறையில் அடைக்கப்பட்டவுடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது பொது மக்களின் நம்பிக்கை தொடர் சிறந்த நடவடிக்கையாக இருக்காது.
சகல குற்றவாளிகளும் சமமாக கருதப்பட வேண்டும் என்பது எமது சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ்வ சம்பந்தமான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் போது இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.