நிறைவேற்று அதிகாரத்திற்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தாமதமின்றி தீர்த்துக்கொள்ளுமாறு நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்து்ளளார்.
அரசியலமைப்பு பேரவைக்கும் இருக்கும் அதிகாரம் தொடர்பாக ஏதோ ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தென்படுவது இப்படியான சிக்கலுக்கு காரணம்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவையை பலவீனப்படுத்தக்கூடாது,அதனை அடிப்படையாக கொண்டு எந்த தரப்பும் மோதலுக்கு செல்லக்கூடாது.
17 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம் வழங்கிய அதிகாரங்கள் 18 மற்றும் 20வது திருத்தச்சட்டங்கள் மூலம் செயலிழக்க செய்யப்பட்டாலும் 19 மற்றும் 21 வது திருத்திச் சட்டங்கள் ஊடாக அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய புத்திசாலித்தனமாகவும் சுதந்திரமாகவும் தீர்மானங்களை எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.
நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து, நாட்டின் சிவில் சமூகத்தின் தலைமையில் முன்னெடுத்த போராட்டம் மூலம் பெற்றுக்கொண்ட வெற்றியை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதுடன் அதனை அடிப்படையாக கொண்டு எந்த தரப்பினருடனும் மோதலுக்கு செல்லக்கூடாது என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
17வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவையை அடிப்படையாக கொண்டு சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலம் நிறுவனங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
17வது திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற தேவையை அடிப்படையாக கொண்டே மக்கள் விடுதலை முன்னணி அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்தது. அதனூடாக நாட்டின் நிர்வாகத்தில் பெரும்பாலும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் போனது மிக முக்கியமான விடயம்.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு அன்று பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரை நியமிக்க அன்றைய அரச தலைமை விரும்பாவிட்டாலும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதில் தடைகள் எதுவும் ஏற்படவில்லை.
இதன் பிரதிபலனாக அரச சேவை, பொலிஸ் சேவை ஆணைக்குழுக்கள் இயங்க ஆரம்பித்ததால், அதன் பின்னர் நடத்தப்பட்ட தேர்தல்களை எந்த அழுத்தங்களும் இன்றி சுதந்திரமாக நடத்த முடிந்தது என்று அன்றைய தேர்தல் ஆணையாளர் பகிரங்கமாக கூறியிருந்ததை நாம் மறந்து விடக்கூடாது.
17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர பங்களிப்பை வழங்கிய பலர் உயிருடன் இல்லை.இதற்காக அவர்கள் அர்ப்பணித்த, உடற்பலம்,நேரம் மற்றும் வழங்கிய அறிவார்ந்த பங்களிப்பு என்பவற்றை 23 வருடங்களின் பின்னர் அழிவான நிலைமைக்கு கொண்டு செல்ல எவராவது முயற்சித்தால், அது மிகவும் துயரமானது என்பதுடன் தூய நோக்கில் செயற்பட்ட அவர்களுக்கு செய்யும் அவமதிப்பு.
இதனால், நிறைவேற்று அதிகாரத்திற்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் செயற்பட்டு, நாடு உணரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து, பொருளாதார கஷ்டங்களை குறைத்து, மக்களின் நலன்களுக்காக அனைவரும் பாடுபட வேண்டும்.
அதிகளவான கொலை சம்பவங்கள்,கொள்ளைச் சம்பவங்கள், போதைப் பொருள் மற்றும் நாடு முழுவதும் புரையோடி போயுள்ள ஊழல், மோசடிகளை என்பவற்றை நாட்டில் இருந்து துடைத்தெறிய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.