ஹெய்டியில் ஜனாதிபதி அரியல் ஹென்ரியின் அரசாங்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ஹென்ரியின் ஆட்சியில் தலைநகர் போர்ட் ஒவ் பிரின்சில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
தலைநகரில் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்கள் விரிவடைந்துள்ளன. தலைநகர் மட்டுமல்லாது, அருகில் உள்ள பிரதேசங்களுக்கு சட்டவிரோத குழுக்களின் நடவடிக்கைகள் பரவியுள்ளன.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதியில் இருந்த வாகனங்கள தீயிட்டு கொளுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ஹெய்ட்டி பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
மக்களின் போராட்டத்திற்கு இடையில் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டில் ஹெய்ட்டியின் அன்றை ஜனாதிபதி ஜொவேனல் மோய்சி படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரதமராக பதவி வகித்த அரியல் ஹென்ரி ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
ஹென்ரி பதவிக்கு வந்த நாளில் இருந்து சட்டவிரோத ஆயுதக்குழுக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்துள்ளன.
இதனால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொலை, பாலியல் வன்புணர்வு,வன்முறை,கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“ஹெய்ட்டி மக்களுக்காக ஜனாதிபதி ஹென்ரி எதனையும் செய்யவில்லை. நாடு முழுவதும் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வீதிகள் சேதமாக்கப்பட்டுளளன.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஹென்ரிக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஆட்சிமுறைக்கும் நாட்டு நடப்புக்கும் எதிராகப் போராடி அவற்றை மாற்ற பாடுபட்டு வருகிறோம்” என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.