இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தானது அருகிலுள்ள பல கட்டிடங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
விபத்தினை அடுத்து, நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சியோனி மால்வா பகுதியைச் சேர்ந்த மக்கள் பீதியைடைந்தும் உள்ளனர்.
தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மீட்புப் பணியும் நடைபெற்று வருகிறது.
அதேநேரம், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அதிகாரிகளுடன் பேசி, சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி, தொழிற்சாலையிலிருந்து தீப்பிழம்புகள் பற்றி எரிவதையும், புகை மூட்டங்கள் வான் நோக்கி எழுந்துள்ளதையும் வெளிக்காட்டுகின்றன.
அனர்த்தத்திற்கு பின்னர் தப்பியோடிய தொழிற்சாலை ஊழியர் ஒருவர், சம்பவம் நடந்தபோது சுமார் 150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாக உறுதிபடுத்தியுள்ளார்.