15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைத்தளங்கள் தடை?

15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைத்தளங்கள் தடை? பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இன்று காரசார விவாதம்!

சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இளைய தலைமுறையை மீட்க, பிரான்ஸ் ஒரு அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட மசோதா, இன்று (ஜனவரி 26, திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அரசால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இந்தச் சட்டம் குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:

மனநலம் காக்கத் தடை! டிக்டாக் (TikTok), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஸ்னாப்சாட் (Snapchat) போன்ற செயலிகள் வளரிளம் பருவத்தினரின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டன. ஆனால், இவை அவர்களின் மனநலத்தைச் சிதைப்பதாகச் சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையத் துன்புறுத்தல் (Cyberbullying),

தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல், வன்முறைக் காட்சிகளைப் பார்த்தல், தூக்கமின்மை, ஆகிய ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைக் காக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

“சமூக வலைத்தளங்கள் போதைப்பொருட்களைப் பழகுவதை அழகுபடுத்திக் காட்டுகின்றன” என மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளம் பெண் ஒருவர் அமைச்சர்களிடம் வேதனையுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

“இது ஒரு போதை” – மாணவர்களின் வாக்குமூலம் லூயிஸ் என்ற 14 வயது சிறுமி கூறுகையில், “சலிப்பு ஏற்படும் போதெல்லாம் காணொளிகள் பார்ப்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது. அது இப்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது,” என்கிறார். ஷே என்ற 13 வயது சிறுவனோ, “காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் இதில் மூழ்கிக்கிடக்கிறோம்,” என ஒப்புக்கொள்கிறார்.

மேல்நிலைப் பள்ளிகளிலும் அலைபேசிக்குத் தடை! சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது, 2026-ம் கல்வி ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளிகளிலும் (High Schools) மாணவர்கள் அலைபேசிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. கல்வி நிலையங்களை முழுமையாகக் ‘கவனச் சிதறல் இல்லாத’ இடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

சட்டச் சிக்கல்களும் புதிய வரைவும் ஏற்கனவே 2023-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இதேபோன்றதொரு சட்டம், நடைமுறைச் சிக்கல்களால் தோல்வியடைந்தது. எனவே, இம்முறை ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு (European Laws) உட்பட்டு, சட்ட வரைவு மிகவும் கவனமாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளது.

இதன்படி, ஆபத்தான சமூக வலைத்தளங்கள் எவை எனப் பட்டியலிடப்பட்டு அவை தடை செய்யப்படும். பிற தளங்களைப் பெற்றோரின் அனுமதியுடன் பயன்படுத்த அனுமதிப்பது போன்ற வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.

அடுத்த கல்வியாண்டு முதல் இச்சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்த, மிக விரைவான செயல்முறையை (Accelerated Procedure) பிரான்ஸ் அரசு கையில் எடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin