இங்கிலாந்தில் குடியேறிகளுக்கு எதிராக வெடித்த போராட்டம்: 500 அகதிகளைத் தங்கவைக்க மக்கள் கடும் எதிர்ப்பு!
தெற்கு இங்கிலாந்தின் குரோபோரோ (Crowborough) நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 25) நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் நகரில் புதிதாகக் குடியேறவிருக்கும் 500 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டனுக்குள் நுழைந்த 500 புகலிடக் கோரிக்கையாளர்களை, குரோபோரோ நகரில் உள்ள பழைய இராணுவ முகாம் ஒன்றில் தங்கவைக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவே மக்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஹர்மன் என்ற போராட்டக்காரர் கூறுகையில், “இந்தப் போராட்டங்களுக்கும் இனவெறிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது எங்கள் எதிர்காலத்தின் பாதுகாப்புப் பற்றியது; அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்,” என்றார்.
கடந்த ஆண்டு, ஹோட்டல்களில் அகதிகளைத் தங்க வைப்பது அதிக செலவு பிடிக்கும் முறை என்பதால், இனி இராணுவத் தளங்களைப் பயன்படுத்தப்போவதாகத் தொழிற் கட்சி (Labour) அரசு அறிவித்திருந்தது.
சட்டவிரோதக் குடியேற்றம் பிரிதானிய அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
2025-ம் ஆண்டில் மட்டும் பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக 40,000-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர். 2018-க்குப் பிறகு பதிவான இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை, முகாமிலிருந்து வெளியே வந்த வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த டாமி ராபின்சன் என்பவர் தலைமையில் லண்டனில் 1,50,000 பேர் திரண்டு பிரம்மாண்டமான பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நிலைமையைக் கட்டுப்படுத்தக் குடியேற்றம் மற்றும் புகலிடம் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்கப் போவதாகப் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

