இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இன்று (ஜனவரி 23, 2026) அதிகாலை 2 மணியளவில் காவல்துறையினா் நடத்திய அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்தவிருந்த பீடி இலை மூட்டைகள் பிடிபட்டன.
திருப்புல்லாணி காவல்துறை ஆய்வாளருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்பிரிவு காவல்துறையினா் அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதன் போது 1,600 கிலோ எடையுள்ள பீடி இலைகள் (37 மூட்டைகள்) பறிமுதல் செய்யப்பட்டதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சரக்கு வாகனம் மற்றும் ஒரு பைபர் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் : பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் வாகனம் ஆகியவை மேலதிக நடவடிக்கைக்காக கீழக்கரை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
தனுஷ்கோடி மற்றும் ராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கஞ்சா, கடல் அட்டை, மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்க இந்திய மற்றும் இலங்கை சர்வதேசக் கடல் எல்லையில் கடலோரக் காவல்படை, மரைன் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ந்தக் கடத்தல் சம்பவங்கள் தனிநபர்களால் மட்டும் முன்னெடுக்கப்படுவதில்லை; சர்வதேச ரீதியில் இயங்கும் ஒரு பலமான வலைப்பின்னல் இதற்குப் பின்னால் இருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
இலங்கையில் சில பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி வரி உயர்வு காரணமாக, இந்தியாவில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் பீடி இலைகள் மற்றும் மஞ்சள் போன்றவற்றை இலங்கையில் அதிக விலைக்கு விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்ட முற்படுகின்றனர்.
இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த சில வியாபாரிகள் மற்றும் முகவர்கள், தமிழகக் கடற்கரை கிராமங்களில் உள்ள சிலருடன் இரகசியத் தொடர்புகளை வைத்துக்கொண்டு, இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தை ஒருங்கிணைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


