வடக்கில் இளைஞர்களை காவு வாங்கும் போதைப் பொருள்

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதன்போது அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தலைமன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அதிக போதைவஸ்து பாவனையே மரணத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்த போதைப் பொருள் பாவனை காரணமாக இளைஞர்கள் பலரும் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான இளைஞர்களின் மரணம் காரணமாக அவர்களை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin