உலகளாவியல் ரீதியில் மிகவும் அருகிவரும் விலங்கு இனங்களில் காட்டு ராட்சத பாண்டாக்களும் ஒன்றாகும். தற்போது சீனாவிலேயே ராட்சத பாண்டாக்கள் அதிகளவாக வாழ்க்கின்றன. ஏனைய நாடுகளில் இதன் எண்ணிக்கை குறைவாகும்.
சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, சீனாவில் ராட்சத பாண்டாக்களின் எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்துள்ளது. 1980ஆம் ஆண்டில் 1100 பாண்டாக்களே இங்கு இருந்துள்ளன. தற்போது இதன் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் ராட்சத பாண்டாக்கள் “அழியும் அபாயத்தில்” இருப்பதாக கூறியுள்ள நிலையில், சீனாவில் அதன் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சீனாவில் ராட்சத பாண்டாக்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளை சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு ஒன்றியம் வரவேற்றுள்ளது.
பாண்டாக்களை பாதுகாக்க சீனா வகுத்துள்ள திட்டம்
”இது நமது நாட்டின் பாதுகாப்பு முயற்சிகளின் முழு உறுதிப்பாடாகும்” – என சீனாவின் தேசிய வனவியல், புல்வெளி நிர்வாகம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறையின் துணை இயக்குனர் ஜாங் யூ கூறினார்.
சீனாவில் ராட்சத பாண்டாக்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.ராட்சத பாண்டாக்கள் சீனாவில் ஒரு தனித்துவமான இனமாகும், மேலும் அவை தேசிய பொக்கிஷமாக போற்றப்படுகிறது.
ராட்சத பாண்டா பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சீனா நான்கு நாடு தழுவிய ஆய்வுகளை நடத்தி புரிதலைப் பெற்றுள்ளது. இயற்கை காடுகளைப் பாதுகாத்தல், புல்வெளிகளை பாதுகாத்தல், வனவிலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பதற்காக இயற்கை இருப்புக்களைக் கட்டுதல் போன்ற முக்கிய சுற்றுச்சூழல் திட்டங்கள் தொடர்ந்து சீனா முன்னெடுத்து வருகிறது.
2021ஆம் ஆண்டு ஒக்டோபரில் ராட்சத பாண்டாக்களை பாதுகாப்பை வலுப்படுத்த 22,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஜெயண்ட் பாண்டா தேசியப் பூங்காவை சீனா நிறுவியது.
சீனாவில் இவ்வாறு இயற்கை பாதுகாப்புகள் ஊடாக ராட்சத பாண்டாக்களின் எண்ணிகையை அதிகரிக்க முடிந்தாலும் ஏனைய நாடுகளால் இதனை செய்ய முடியவில்லை. பல நாடுகள் காடுகளின் அளவில் ஏற்பட்டுவரும் மாற்றத்தை கண்டுகொள்ளாது செயல்படுகின்றன. இயற்கை வளம் அருக அருக விலங்கு இனங்களின் எண்ணிக்கையிலும் குறைவுகள் ஏற்படுவதாக உலகளாவிய இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.