கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு இம்முறை குழை சாதமும், பொங்கலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
திருவிழாவிற்கு இம்முறை இலங்கையை சேர்ந்த 4 ஆயிரம் பக்தர்களும் , இந்தியாவை சேர்ந்த 4 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படவுள்ளனர்.
ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு 23ஆம் திகதி இரவு குழை சாதமும் , மறுநாள் 24ஆம் திகதி காலை சர்க்கரை பொங்கலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழா முன் ஆயத்த கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
தீ மூட்டி உணவு சமைப்பதற்கு அனுமதிப்பதில்லை
செலவுகளை குறைக்கும் முகமாகவே இந்த உணவுகளை தெரிந்துள்ளதாகவும், ஆலய சூழலில் பக்தர்கள் தீ மூட்டி உணவு சமைப்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, படகில் இருந்து ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களை உட்செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த வருடம், ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் சோதனை நடவடிக்கைக்காக நீண்ட நேரம் கடற்கரையில் வெய்யிலில் காத்திருந்தமை தொடர்பில் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போதே, சோதனை நடவடிக்கைக்காக மேலதிக கடற்படையினரை பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.