இந்திய தலைநகர் டெல்லியில் இந்தப் பருவத்தின் மிகவும் குளிரான காலை என இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜனவரி 12) பதிவானது.
டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. கடும் பனியால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லியில் கடும் குளிா், அடா்த்தியான மூடுபனி, தெளிவற்ற பார்வைத் திறன் தொடர்ந்து நிலவி வருவதால், டெல்லிக்கு வரவேண்டிய ரயில்களில் ஏறக்குறைய 39 ரயில்கள் 6 மணிநேரம் வரை தாமதமாக இயங்கும் என வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலைய பகுதியில் பனிமூட்டம் காரணமாக காட்சி தெரியும் நிலை பூஜ்ஜியமாக இருந்தது. இதனால் 55 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சில விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை ஒன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரை தாமதமும் ஆகின. டெல்லியில் பகல் நேரத்திலும் மிதமான மூடுபனி நிலவியதை அடுத்து, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரு நாள்களுக்கு பனிமூட்டம் நிலவும் எனவும் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் அடர் பனி நீடிக்கும் எனவும் ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் குளிர் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.