ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தொடங்கவுள்ளன.
இலங்கை நேரப்படி நள்ளிரவு 9.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவும் லெபனானும் மோதவுள்ளன. 13ஆம் திகதி இடம்பெறும் ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
மொத்தம் 24 அணிகள் மோதும் இத்தொடரின் இறுதி போட்டி பிப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பிரிவிற்குத் தலா நான்கு அணிகள் என ஆறு பிரிவுகளாக முதல் சுற்றுப் போட்டிகள் இடம்பெறுகின்றன. அவற்றிலிருந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறும்.
18ஆவது ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் கடந்த ஆண்டே சீனாவில் நடப்பதாக இருந்தது. ஆனால், சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்ததால், அப்போட்டிகள் கத்தாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இவ்வாண்டுத் தொடக்கத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
நடப்பு வெற்றியாளரான கத்தாரும் நான்கு முறை கிண்ணம் வென்றுள்ள ஜப்பானும் இம்முறை வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள அணிகளாகக் கருதப்படுகின்றன.