மீண்டும் ஒரு இன அழிப்பு புதிய சட்டங்களால் தமிழர்களுக்கு காத்திருக்கின்றது!
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரிக்கை!!
தற்போதைய அரசாங்கத்தால் உத்தேச சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாயின் மீண்டுமொரு தமிழின அழிப்பு நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
பழைய பயங்கரவாதத் தடைச்சட்டம் பெயர் மாற்றப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக கொண்டு வரப்படுவதற்கு அப்பால் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் ஜனநாயகப் போராட்டங்களையும் பயங்கரவாதமாகப் பார்க்கும் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமிழர் பகுதியில் சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழர்கள் மூச்சுக் கூட விடமுடியாத சூழ்நிலை உருவாகும்.
நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசாங்க செயற்பாடுகளை விமர்சித்தால் அதனை ஊடகங்களில் பதிவு செய்தால் போன்றவற்றுக் எதிராக கருத்து வெளியிட்ட நபரை அல்லது குழுவை சிறையில் தள்ளும். இது ஒன்று இதனை விட மேலும் பல மோசமான சரத்துக்கள் உள்ளன.
இரண்டு உத்தேச சட்டங்களும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதிப்பாக இருந்தாலும் தமிழ்ர்களை இது முதன்மையாக குறி வைக்கும். காரணம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை எப்படி பயங்கவாதத் தடைச்சட்டம் கருவறுத்து முள்ளிவாய்க்காலில் பாரிய தமிழின அழிப்பை ஏற்படுத்தியதோ மீதியை ஜனநாயகம் என்ற போர்வையில் இந்த இரண்டு சட்டங்களும் அடக்கி தொங்கி நிற்கும் இருப்பையும் கபளீகரம் செய்து மீண்டும் ஒரு தமிழின அழிப்பை ஏற்படுத்தத் தயாராகிறது என சபா குகதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.