நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்: ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு இதுதான்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு.

 

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான ஒன்றல்ல மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் நமது நாட்டின் இறைமையை பாதிக்கின்ற விடயங்களை நெறிப்படுத்துகின்ற ஒரு சட்டமூலம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.01.2024) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

நிகழ்நிலை காப்பு ஆணைக் குழுவை ஸ்தாபிப்பது, சில தொடர்பாடல்களை தடை செய்வது, தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களைப் பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல், சிறுவர் துஷ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய்நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை, தடை செய்யப்பட்ட அறிக்கையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபர்களுக்கு அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு உத்தரவுகளை வழங்கவும் ஏதேனும் தடை செய்யப்பட்ட அறிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமலாக்குவது அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை உகந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

 

அதனடிப்படையில் இந்தச் சட்டம் என்பது நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தவும் கேள்விக்குட்டிடுத்தவும் முற்படுவொருக்கு குறிப்பாக குறிப்பாக குறுந்தூர் மலை வெடுக்குநாறி, கிண்ணியா போன்ற நீதிமன்ற தீர்ப்புகளை அவமதித்த அவமதிக்கின்ற சாராருக்கு இவ்வாறான சட்டமூலம் கட்டுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN