சுகாதார ஊழியர்களுக்கு எதிராக 600 முறைப்பாடுகள்

வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு எதிராக வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், சுகாதார துறையினர் நோயாளர்களுக்கு தம்மால் இயன்றதை செய்கின்றார்களோ என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நோயாளிகள் அளிக்கும் முறைப்பாடுகளை ஆய்வு செய்வதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருந்து பற்றாக்குறை, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் , குழந்தைகளின் போசாக்கு குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார துறையில் பணியாளர் பற்றாக்குறையை மட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பயிற்சிக்காக ஆயிரம் தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் புத்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin