புதிய நம்பிக்கையுடன் கூடிய நாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதிய சகாப்தத்தை உருவாக்கும் சவாலான திட்டத்தை செயல்படுத்த உதவுவதன் மூலம் ஒழுக்கம் மற்றும் ஜனநாயக சமுதாயத்தில் வளமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு நாடு எதிர்கொண்ட உணவு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகள் ஆற்றிய சவாலான பணிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
தொழில் முனைவோர் மனப்பான்மையுடன் புதுமையான கருத்தாக்கங்கள் மூலம் புதிய தலைமுறைக்கு வலுவூட்டுவதன் மூலம் நாட்டை உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதில் உறுதியாக உள்ளோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாடு எதிர்கொண்ட பாதகமான விளைவுகளைத் துடைத்து, அடுத்த தலைமுறைக்குக் கொடுக்காமல் இருக்க, புதிய கருத்துகளால் செழுமைப்படுத்தப்பட்ட புதிய ஆண்டில் அடியெடுத்து வைப்போம் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.