சீனா சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கேர்ணல் மெடெல் அகுயிலார்,தென்சீனக் கடலில் சீனாவுடன் மோதல் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
தனக்கு சொந்தமான கடல் பகுதிக்குள் பிலிப்பைன்ஸ் அத்துமீறி பிரவேசிப்பதாக சீனா கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழான பீப்பள்ஸ் டெய்லி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டே பிலிப்பைன்ஸ் செயற்பட்டு வருகிறது.
பிலிப்பைன்ஸ் கடல் எல்லைக்குள், நாட்டின் தனிப்பட்ட பொருளாதார மண்டலத்திற்குள் மாத்திரமே கடற்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கேர்ணல் மெடெல் அகுயிலார் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அமெரிக்காவுடன் இணைந்து பிலிப்பைன்ஸ் தென்சீனக் கடலில் மோதலைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.
இப்படியான நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானவை எனவும் அது பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் என சீனா குறிப்பிட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள கேர்ணல் மெடெல் அகுயிலார்,தென்சீனக் கடலில் இருக்கும் கப்பல்கள், கடலோடிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் செயல்படவில்லை என கூறியுள்ளார்.
எனினும் சீனா பயங்கரமான பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது எனவும் இதனால் சில சமயங்களில் கடலில் விபத்துகள் ஏற்படுவதாகவும் சீனாவே அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.