தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன்.
தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள திமுக அமைச்சர்களுக்கு சில கேள்விகள்.
தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து கோபாலபுரத்தின் இளவரசரும் மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சொன்னார்.
அந்த 30,000 கோடி எங்கே என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
#DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்குவதை சுட்டி காட்டி துபாயிலிருந்து நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து வருவதாக சொன்ன 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம்.
முறைகேடாக கொள்ளையடித்த மக்கள் வரிப்பணத்தை முதலீடாக கொண்டுவருகிறீர்களா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளில் 98 சதவீதம் முடித்துவிட்டோம் என்று தமிழக முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் சொன்ன போது, நீங்கள் சொன்னது எல்லாம் பொய், 42 சதவீதம் பணிகள் தான் முடிந்துள்ளது என்று நாங்கள் சொல்லவில்லை, திமுக அமைச்சர் கே என் நேரு சொன்னார்.
98 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட பணிகளுக்கு செலவிட்ட தொகை என்ன ஆனது என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
ஊழல் புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். நேற்று மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி ஊழல் புகாருக்கு சிறை தண்டனை பெற்று சிறை செல்லவுள்ளார். இது மட்டுமில்லாமல், திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.
மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து சிறை தண்டனை பெறும் நீங்கள் மக்கள் வரி பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று பாடம் எடுக்க வேண்டாம். புழல் சிறையில் திமுக அமைச்சர்களுக்கென ஒரு தனி கட்டிடம் உருவாக்குங்கள்.
ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்ததாக சொல்லப்படும் நீரோ மன்னன் போல தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்த போது தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் இந்தி கூட்டணி சந்திப்பில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார்.
அங்கு திமுகவினருக்கு மொழிபெயர்க்க முடியாது என்றும் திமுகவினர் இந்தி கற்க வேண்டும் என்றும் உங்களை பீகார் மாநில முதல்வர் அவமானப்படுத்திய போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கற்று தந்ததை திடீரென்று மறந்துவிட்டீர்களா?
விளம்பரத்திற்காக ஆட்சி நடத்தி ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் பொழுதை போக்கும் நீங்கள் இனியும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.
மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை வெள்ளை அறிக்கையாக கொடுத்துள்ளது @BJP4TamilNadu.
தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது. அதை ஊழல் செய்யாமல் மக்களிடம் சென்று உங்களால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை தடுக்காதீர்கள்.