ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட இரவு விருந்தொன்றை ஷங்ரிலா ஹோட்டலில் வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை இரகசிய சந்திப்பொன்று இருவருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
இரவு விருந்துடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி செயலகத்தின் தலைமை பணிப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரைத் தவிர வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.
எதிர்காலத்தில் எவ்வாறு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் இங்கு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரவு விருந்திற்கு மறுநாள் திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வெளியிட்ட அறிவிப்பில் ஜனாதிபதிக்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டிருந்தமை அவதானிக் கூடியதாக இருந்தது.
‘வரிச் சுமை’ இருந்தாலும், அடுத்த தேசியத் தேர்தல் வரை அரசாங்கத்தை பொதுஜன பெரமுன பாதுகாக்கும் என முன்னாள் ஜனாதிபதி குறித்த அறிவிப்பில் கூறியிருந்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் சட்டவாட்சியை நிலைநாட்டியுள்ளதாகவும் புகழ்ந்தார்.
இந்த தகவலை அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.