இமாலயப் பிரகடனம் அல்ல : இமாலயப் பிரட்டுருட்டு – அனந்தி சீற்றம்!

இமாலயப் பிரகடனம் என்பது ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையை வலியுறுத்தவில்லை, ஒத்துக்கொள்ளவில்லை. வரலாற்று ரீதியான தனித்துவமான இறைமைக்கு ஈழத்தமிழர்கள் உரித்துடையவர்கள் என்பதை அது உரைக்கவில்லை, உதறிவிட்டுள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (18) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சனநாயக ரீதியில் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் தந்தை செல்வாவின் தலைமையில் மேற்கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அற வலிமையை அழித்துவிடலாம் என்ற கற்பனையில் உலகில் உயரமான மலையில் இருந்து கனவு காண வைக்கப்பட்டிருக்கிறார்கள் வெள்ளையும் காவியும் தரித்தவர்கள் சிலர்.

இந்த வெண்ணிற ஆடைக் காரருக்கும் காவித் தரப்பினருக்கும் சில செய்திகளை சர்வதேச நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நான் இங்கே தெளிவாக முன்வைக்க விரும்புகிறேன்.

முதலில் தென்னிலங்கை பௌத்த மதபீடங்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி. ஈழத்தமிழர்கள் நல்லிணக்கத்தை எப்போதும் விரும்பியவர்கள். ஈழத்தமிழர்களின் நல்லிணக்கத்தை சீரழித்து இன அழிப்புச் சிந்தனைக்கு வழிகோலிய மகாவம்ச மனநிலையை நீங்கள் மாற்றினால் ஒழிய உண்மையான நல்லிணக்கம் ஏற்படாது. உண்மையான நல்லிணக்கம் தான் உங்கள் நோக்கம் என்றால் அதை ஆரம்பிக்கவேண்டிய புள்ளிகள் எவை என்று எனது பார்வையில் உங்களுக்கு இரண்டு விடயங்களைச் சொல்லுவேன்.

உங்களுக்கு பௌத்த தந்த தாதுவைப் பேணும் தலதா மாளிகை எவ்வளவு புனிதமானதோ அதைப்போல உண்மையான வித்துடல்களை விதைத்த எமது மாவீரர் துயிலும் இல்லங்கள் எமக்குப் புனிதமானவை. அவற்றைத் துவம்சம் செய்த சிங்கள இராணுவத்தின் மன்னிக்கமுடியாத குற்றத்தை முதலில் போக்குங்கள்.

எமது மாவீரர்களை அவர்களது பதவி நிலைகள் பொறித்த நடுகற்களோடு மீண்டும் துயிலும் இல்லங்களை உடைக்கப்பட்ட கற்களைப் பொறுக்கி எடுத்து முதலில் கட்டுங்கள். அது தான் நீங்கள் நல்லிணக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய புள்ளி.

மகாவம்ச எடுத்துரைப்பில் கூட தமிழ் அரசனான எல்லாளனை போர்முனையில் இடறிக் கொன்ற துட்டகெமுனு பின்னர் தமிழ் மன்னனை வணங்கச் செய்த நல்லிணக்க வரலாறு இருக்கிறது. அதைக் கூட மீண்டும் செய்ய இயலாதவர்கள் நீங்கள்.

வடக்கு கிழக்கில் வரலாற்று ரீதியான தமிழ்ப் பௌத்த வரலாற்றையும் நிராகரித்து, தேரவாத சிங்கள பௌத்த வரலாற்று அடையாளங்களாக அவற்றை மாற்றும் நாகரிக இன அழிப்புச் செயற்பாடுகள் இன்றும் தொடருகின்றன. இவற்றை நிறுத்தி, எமது வரலாற்றை நாமே பேணும் சமத்துவத்தை உருவாக்குங்கள். இதுதான் உங்களது நல்லிணக்கத்துக்கான ஆரம்பப் புள்ளி.

வெண்ணிற ஆடை அணிந்த சில புலம் பெயர்க் கறுப்பு ஆடுகளோடு கைகோர்த்து எங்களுக்கு நல்லிணக்கப் பாடம் நடத்த நீங்கள் முயல்வது புனிதமற்ற செயற்பாடு.

வெண்ணிற ஆடை அணிந்து மத குருக்களோடும் கோர்ட் சூட்டில் அரசியல்வாதிகளோடும் படம் காட்ட வைக்கப்பட்டுள்ள சில புலம்பெயர் தமிழர்கள் மக்கள் அங்கீகாரமும் ஆணையும் அற்ற வெள்ளையடிக்கப்பட்டுள்ள ஆசாமிகளாகவே எங்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள். இவர்கள் நேபால் நாட்டின் நாகர்கோட் நகரில் இந்தவருடம் ஏப்ரல் மாதம் இரகசியமாகக்; கூட்டப்பட்டு புரிந்திருப்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இமாலயப் பிரகடனம் அல்ல, இமாலயத் தவறு.

எம்மைப் பொறுத்தவரை இது ஒரு பிரகடனமே அல்ல, ஈழத்துத் தமிழ் வழக்கில் இதைப் ‘பிரட்டுருட்டு’ என்றே சொல்லமுடியும். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே திட்டமிட்ட இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றை இந்தப் பிரட்டுருட்டுப் பிரகடனம் பிரட்டியும் பார்க்கவில்லை.

ஆயுதப் போராட்டம் இன அழிப்புப் போர் ஊடாக அழிக்கப்பட்ட பின்னரும் பண்பாட்டு இன அழிப்பும், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் இன்றுவரை தொடர்வதை அது எடுத்துரைக்கவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் வரலாறு சொல்லப்படவில்லை. இன அழிப்புக்கு சர்வதேச நீதி ஏன் அவசியம் என்பது சொல்லப்படவில்லை. சுயநிர்ணய உரிமை பற்றி இம்மியளவும் இதில் எதுவும் இல்லை.

நான் ஏற்கனவே குறிப்பிட்ட எமது தேசிய விடுதலைக்கான அடிப்படைகள் அனைத்தையும் அடியோடு உருட்டிப் பிரட்டிப் போடும் நோக்கோடு இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வெண்ணிற ஆடைக் கூட்டம் ஆட்டுவிக்கப்படும் கூட்டம். ஆட்டுவிப்பவர்கள் யார் என்பதும் அவர்களின் திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதும் போகப் போக மேலும் துல்லியமாகத் தெரியவரும்.

இதற்குப் பின்னால் நீண்ட காலமாக ஈழத்தமிழர்களைக் குறிவைத்து இயங்கி, தமது கஜானாக்களைத் திறந்துவிட்டு, பலவீனமான நம்பிக்கை இழந்த செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களை மேசையில் இருத்தி சனநாயகம், வெளிப்படைத் தன்மை, உண்மைத் தேடல், ஒப்புக்கொள்ளல், நல்லிணக்கம் என்ற சொற்களின் உள்ளடக்கத்துக்கு எதிராக இரகசியமாகச் செயற்படும் இந்த அமைப்புகளால் ஏவி விடப்பட்டு அவர்களின் பரிசோதனைக்குப் பலியாகி, வெள்ளை ஆடுகள் போலத் தோற்றமளிக்கும் கறுப்பு ஆடுகள்.

நல்லிணக்கம் என்ற போர்வையில் தமக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமற் செய்து ஈழத்தமிழர்களைப் ‘பிராக்காட்ட’ இந்தப் பிரகடனம் முயல்கிறது. ஆனால், இது சரிவரப் போவதில்லை. பிராக்காட்ட உருவாக்கப்படும் பிரட்டுருட்டுப் பிரகடனங்கள் ஒருபோதும் எடுபடப் போவதில்லை.

மிகவும் அகலமாகப் பொருள்படுகின்ற, பரந்துபட்ட பொருள் தருகின்ற பொறுப்புக்கூறல், கூட்டு உரிமைகள், அதிகாரப் பங்கீடு, புதிய அரசியலமைப்பு என்பவற்றை ஆங்காங்கே பிரட்டி உருட்டி, அதற்குள் அதுவும் இருக்கிறது இதுவும் இருக்கிறது என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த இமாலயப் பிரட்டுருட்டு.

இதனை எந்த ஒரு வலுவுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாளாந்தம் மறுப்பு அறிக்கைகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் வந்துகொண்டிருக்கின்றன. தங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாது சிதறடிக்கப்பட்டிருந்தாலும் புலம் பெயர் சூழலில் இயங்கும் பல அமைப்புகள் இதை மறுத்துவிட்டார்கள். தாயகத்திலும் ஈழத்தமிழர் தேசத்துக்கான அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், பிரட்டுருட்டு நாடகம் தொடருகிறது. ஏதோ மாநாடுகளும் கலந்தாலோசனைகளும் செய்வது போன்ற தோரணையில் சந்திப்புகளும், ஊடக அறிக்கைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இதற்கு சில மேற்கு நாடுகளின் தூதரலாயங்களும் வரவேற்பு வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகளையும் இதற்குப் பயன்படுத்தி இணங்கவைக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சிகளும் சந்திப்புகளும் நடக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறத்தில் இந்திய மத்திய அரசை அல்லது இந்திய இந்துத்துவவாத தரப்புகளை நோக்கி அணிவகுக்கச் செய்யப்பட்டுள்ள சில ஈழத் தமிழ் அரசியல், மத, சிவில் சமூக, கல்விச் சமூக கருத்துருவாக்கிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த இமாலயப் பிரகடனத்தை மறுதலித்துள்ளார்கள். இதையும் நாங்கள் கூர்மையாக அவதானித்து வருகிறோம்.

இமாலயப் பிரகடனம் அடுத்துக் குறிவைக்கப் போவது தமிழ்நாட்டை. குறிப்பாக தமிழ் நாட்டு அரசை. மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்களின் நிலை கண்டு, தனது கடந்த கால நிலைப்பாடுகளில் இருந்து முழுமையான மனமாற்றம் கண்டு முன்வைத்த தீர்மானத்தின் வலுவை தமிழ் நாட்டு அரசியலில் இருந்து அகற்றிவிடவேண்டிய தேவை வெண்ணிற ஆடைகளை இயக்கும் சக்திகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் இயங்கிவருகிறார்கள்.

இப்படியெல்லாம் விரைவில் நடைபெறும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த நிலையில்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் ஏப்ரல் மாதத்திலும் தமிழ்நாட்டில் நீண்டகாலம் ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்களை இணைத்து அவர்களுக்குச் சில அடிப்படைகளை மீண்டும் தெளிவாக வலியுறுத்துமாறு வேண்டிக்கொண்டேன். இதற்கான பயணத்தை மேற்கொண்டு தமிழ்நாட்டில் வேண்டிய கதவுகளைத் தட்டினேன்;. இறுதியில் தெளிவான தீர்மானங்களும் அங்கே வெளியிடப்பட்டன. அவற்றை மீண்டும் ஒருமுறை ஈழத்தமிழர்கள் அனைவரும் மீண்டும் வாசித்து அசை போட்டுப் பார்த்தால் உண்மை புரியும். அந்தத் தீர்மானங்களை மறுதலிக்கச் செய்யும் நோக்கத்தோடு தான் தற்போது இமாலயத் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஆளும் தரப்பு ஈழத்தமிழரின் நீதிப் பயணத்துக்கும் விடுதலைக்கும் குரல்கொடுக்காமல் மாற்றப்பட்டு இலங்கை அரசுக்கும் வெளிச் சக்திகளுக்கும் ஏற்ற வகையில் கையாளப்படும் நோக்கில் எரிக் சொல்கைம் இயங்கி வருகிறார். அவர் தமிழ் நாட்டிலும் ஆலோசகர், இங்கே ரணிலுக்கும் ஆலோசகர். சீனாவிடமும் அவர் சம்பளம் வாங்குகிறார். இந்தியாவிலும் இயங்குகிறார். இவருக்குச் சமாந்தரமாக மறைமுகப் பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் சில மேற்கு நாடுகளின் நலனுக்காக இயங்கும் அமைப்புகளும் அதேபோன்ற வேலைத் திட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்படுகின்றன. இவர்கள் அனைவரும் குறிவைப்பது வடக்கு கிழக்கை மட்டுமல்ல, தமிழ் நாட்டையும் கூட. இதற்காகவே புலம் பெயர் சூழலில் தனித்துப் போயுள்ள சில ஆடுகள் பலியிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பல குழப்பங்கள் இருந்தாலும் கடந்த வருடம் எடுத்துக்கொண்ட முயற்சியால் பெரும்பாலனவர்களை ஒரே மேடையில் சந்திக்கச் செய்து பல தரப்புகளின் பொது இணக்கப்பாட்டுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல புலம் பெயர் தரப்புகளும் பொதுவாக ஒரு மேடையில் இணைந்து தீர்மானங்களை இனியாவது வெளியிடவேண்டும். அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ள தாயகத்திலும் இவ்வாறு ஒரே மேடையில் தமிழ்த் தேசியத் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்மானங்களை இயற்ற வேண்டும். ஆனால், அந்தச் சிந்தனையை இங்குள்ள சில அரசியல் கட்சிகள் கொன்று தின்றுவிட்டன. உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் முடக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

2015 ஆம் ஆண்டு மக்களாணை பெற்ற வடமாகாண சபையில் இன அழிப்புக்குச் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டு ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் வெளியிடப்பட்டது என்பது முக்கியமான ஒரு விடயம். இதைப் போலப் பெரும் நெருக்கடிகள் இருந்த காலத்தில் தான் அதுவும் நடந்தது என்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆகவே, மீண்டும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு தளத்தில் அனைவரும் கூடி ஈழத்தமிழர் நிலைப்பாட்டை வலியுறுத்தவேண்டும். தகுந்த மக்கள் தரப்பு இதை முன்வந்து முன்னெடுத்தால், மீண்டும் தெளிவாக ஒரு செய்தியை உலகுக்கு உரைக்கமுடியும்.

ஆனால், அவ்வாறு முன்னெடுக்கும் தரப்பு ஒரு போதும் குறிப்பிட்ட எந்த ஒரு வெளிநாட்டின் நிகழ்ச்சிநிரலுக்குள் மட்டும் இயங்கக் கூடாது. இந்தியா மட்டுமே எமக்குத் தேவை என்றோ, மேற்கு நாடுகள் தான் எமக்கு நீதி தரும் என்றோ தனித்தனி வழிகளில் போலி நம்பிக்கைகளோடு இயங்கக்கூடாது. அதேவேளை, தனித்தனி வழிகளில் இயங்கும் அனைத்துத் தரப்புகளும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்காக ஒரு மேடையில் அடிப்படைகளை வலியுறுத்துவதற்காகவேனும் ஒன்று கூடி எமது நிலைப்பாடுகளை வலியுறுத்தவேண்டும்.

விரைவாக மாறிவரும் உலக சூழலில் திறக்கப்படக் கூடிய புதிய கதவுகளைத் திறக்கும் வகையில் சுயாதீனமாக ஈழத்தமிழர் தரப்புக்குரிய மக்கள் சக்தி திரட்டப்படவேண்டும்.

எனது கடமையாக சர்வதேச நீதியே பொறுப்புக்கூறலின் முக்கிய நகர்வு என்பதை 2013 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத் தொடர்களில் பங்கேற்று இன அழிப்புக்கான நீதியை வலியுறுத்திவந்துள்ளேன்.

இவ்வருடம் கூட இறுதியாக நடைபெற்ற அமர்விலும் நேரடியாகக் கலந்துகொண்டு அதையே வலியுறுத்தினேன்.

அதுமட்டுமல்ல, இன அழிப்புப் போரில் இலங்கை அரசுக்கு முட்டுக்கொடுத்த சர்வதேச தரப்புகள் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை முன்னெடுக்காது இலங்கை அரசுக்குக் கால நீடிப்பைத் தொடர்ந்துவருவதால் தொடர்ந்தும் ஈழத்தமிழர் மீது சர்வதேச அநீதியே கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் தீர்ப்பாயம் தனது தீர்ப்பாக ஜேர்மனியில் வழங்கியிருந்தது. அந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வில் கலந்துகொண்டு, அங்கு வெளியான தீர்ப்பையும் மனித உரிமைப் பேரவையில் எடுத்துரைத்தேன்.

இவ்வாறு, எமது நீதிக்கான பயணம் தொடருகிறது. சர்வதேச நீதியை வலியுறுத்தி, தாமதிக்கப்படுகின்ற, மறுக்கப்படுகின்ற நீதியை வென்றெடுக்க ஒரு புறம் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் போது, ஒருசில புலம்பெயர்ந்த கறுப்பு ஆடுகள் மறு புறத்தில் இமாலயத் தவறான பிரட்டுருட்டுப் பிரகடனத்தோடு பிரவேசித்திருக்கிறார்கள்.

மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் இவ்வாறு சிலர் இங்கு வந்துபோனதும், விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான கே.பி. என்பவர் ஊடாக இவ்வாறான சந்திப்புகள் முன்னெடுக்கப்பட்டதும் காற்றோடு கரைந்து போன கதையாகிவிட்டது.

இதைப் போல, இதே வெண்ணிற ஆடை ஆசாமிகள் 2013 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சிறிசேன ஆட்சிக்கு வந்தபோது போட்ட தீர்மானத்துக்கு என்ன ஆனது என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும். இதையே இமாலயப் பிரகடனத்துக்கும் இதே கதிதான் ஏற்படும்.

2015 ஆம் ஆண்டு வடமாகாண சபையில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது சிங்கப்பூர் கோட்பாட்டுக் காரருக்கு பெரிய சிக்கலை உருவாக்கியது. இதனால் வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து இறக்கும் சதியை ஐரோப்பாவில் இருந்து ஆதரித்து சில வேலைத் திட்டங்கள் நடைபெற்றன. ஆனால், இவற்றையெல்லாம் சரிவரப் புரியாதவராகவே முதலமைச்சர் காணப்பட்டார். புரியாத போதும் அவர் சரியாகச் செயற்பட்டார் என்பதால் அவரை விழவிடாது காப்பாற்றினோம். வடமாகாண சபையில் அவருக்கு அடுத்ததாக பெருமளவு வாக்குகளோடு தெரிவாகியிருந்த எனக்கு, எந்த அமைச்சுப் பொறுப்பும் தராமல் அவர் அமைச்சரவையை ஆரம்பத்தில் அமைத்திருந்தார். பின்னர் சிக்கல் உருவாகிய பின்னரே இறுதியில் அமைச்சுப் பொறுப்பைத் தந்திருந்தார். இப்படி பலவிதமான விடயங்களைத் தாண்டியே நாங்கள் நீதிக்காக, பொறுமையோடும் பொறுப்போடும் பயணித்து வருகிறோம்.

இப்போது மாகாண சபை கலைக்கப்பட்டிருந்தாலும். மாகாண சபையில் கடமையாற்றி இறுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கூட ஒன்றாகக் கூட்டி சில செய்திகளை உலகுக்குச் சொல்லலாம். செய்வார்களா என்ற கேள்வியை இங்கு முன்வைக்கிறேன்.

நல்லிணக்கம் என்ற போர்வையில், நாமும் குற்றம் இழைத்தோம் என்று நாமே ஒத்துக்கொண்டு எமது வரலாற்றை மறந்துவிடவேண்டும் மறுதலிக்கவேண்டும் என்ற சிந்தனையோடு உண்மை உரைக்கும் ஆணையம் என்ற நாடகத்தை ஆடி, சர்வதேச நீதியை மறுதலித்து, இலங்கைக்குள் அதை முடக்கும் இமாலயச் சதியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்கவேண்டும். இதையே ரணிலும் அவருக்குப் பின்னால் இருக்கும் மிலிந்த மொராகொடயும் பேச்சுவார்த்தைக் காலத்தில் இருந்து முன்னெடுக்கிறார்கள்.

இதைப் புரிந்துகொண்டு, இவற்றை எமது விடுதலை அரசியலால் இந்தப் போலி நாடகங்களை நாம் மறுதலிக்கவேண்டும்.

மேற்கு நாடுகளில் இருந்து இந்த நடவடிக்கைகளைச் சில நிறுவனங்கள் முன்னெடுக்கின்ஜறன. இலங்கை அரசை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஈழத்தமிழர்கள் இருப்பது போல அறிகுறிகளைக் காட்டி சர்வதேச நீதியை முடக்கும் வேலைத் திட்டத்திற்கு நாம் பலியாகத் தயாராக இல்லை என்ற செய்தி உரப்பாகவும் எந்தவித ஐயத்துக்கும் இடமளிக்காத வகையிலும் அப்பட்டமாக உலகத்துக்குச் சொல்லப்படவேண்டும். இது செய்யப்படாவிட்டால் மேலும் பல பிரட்டுகள் எதிர்வருகின்ற கிழமைகளிலும் மாதங்களிலும் நடைபெற வாய்ப்பிருக்கிறது.

இந்த வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களின் முன்னெடுப்புகளோடு தமது கஜானாவை நிரப்பலாம் என்று 2015 ஆம் ஆண்டில் நிலைமாறுகால நீதி பேசப் புறப்பட்ட தன்னார்வ நிறுவனங்களும் மனித உரிமை என்ற போர்வையில் இயங்கிய சில நிறுவனங்களும் தனிநபர்களும் எவ்வாறு அணிவகுத்தார்களோ, அதைப்போல மீண்டும் ஓர் அணிவகுப்பை உருவாக்க மீண்டும் முயற்சி நடைபெறுகிறது. இவர்களில் பலரை இன்று காணவும் கிடைக்கவில்லை.

ஆகவே, ஒரே தளத்தில் ஒன்றிணைந்து பலமாக இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஐரோப்பாவில் இருக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கும், தாயகத்தில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஈழத்தமிழர் தரப்புகளுக்கும் உள்ளது. அப்போது தான் இந்த மாயைகளுக்கு முற்றுப் புள்ளி இட முடியும்.

தமிழ்நாட்டில் தீர்மானத்தை நிறைவேற்ற ஒரு மேடையில் தோன்றியவர்களுக்கும் அதன் தொடர்ச்சியைப் புரிந்து செயற்படவேண்டிய கடமை இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் பிச்சை கேட்டு கதவைத் தட்டி அலையவேண்டிய அவல நிலையை எமக்கு தமிழ்நாட்டில் இருக்கும் உறவுகள் ஏற்படுத்தக்கூடாது.

மாகாண சபைத் தேர்தலில் பெருந்தொகையான மக்களின் வாக்குகளோடு தெரிவாகிய மக்கள் ஆணையோடு நான் தொடர்ந்தும் நீதிக்கான செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். ஒன்றித்து ஒரே தளத்தில் ஈழத்தமிழர் மக்களானை பெற்ற பிரதிநிதிகள் கூடி உலகுக்கு எடுத்துச்சொல்லவேண்டியதைத் தெளிவாக முன்வைக்க நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன். ஈழத்தமிழர் தேசிய விடுதலை பற்றியும் அரசியல் விடுதலை பற்றியும் பேசும் ஏனையவர்கள் இதயசுத்தியுடன் அடிப்படைகளை இணைந்து வலியுறுத்தத் தயாராக உள்ளார்களா என்ற கேள்வியை முன்வைக்கிறேன் என்றுள்ளது.

Recommended For You

About the Author: admin