இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி.சம்பத்குமார் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் தண்டனை 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.பி.எல் போட்டிகளில் இடம்பெற்ற சூதாட்டம் தொடர்பில் விசாரணை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார், தோனிக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு கடந்த 2014ஆம் ஆண்டு தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீதிபதிகளான எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.