உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால், எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் இங்கு வரலாம். அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீ ரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலக தமிழர் பேரவையின் இமாலய திட்ட செயற்பாட்டை கடந்த காலங்களில் முயற்சித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நாம் வெளிப்படையாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் யுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு தரப்புக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
அப்போது உலக தமிழர் பேரவையினர் என்ன செய்தனர் என்பதனை இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் இதேபோல் தங்களது பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கியிருந்தால் 30 வருட யுத்தத்தினை தடுத்து நிறுத்த அழுத்தத்தையாவது கொடுத்திருக்கலாம்.
இருப்பினும் காலம் கடந்த பின்னராவது தாயகத்திற்கு திரும்பி இவ்வாறு அக்கறையுடன் செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு சர்வதேச புலம்பெயர் அமைப்புகள் எமது நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். சந்தரப்பம் வழங்கப்படும் பட்சத்தில் ஜனநாயக தேர்தல் அரசியல் நீரோட்டத்திலும் பங்காற்ற வேண்டும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வை தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகத்தான் அணுக வேண்டும் என்பதை உலக தமிழர் பேரவையின் நகர்வும் எடுத்துக்காட்டியுள்ளது. எம்மிடம் அரசியல் பிரதிநிதித்துவப் பலம் போதியளவில் இல்லை. அது மற்றவர்களிடம் உள்ளது.
ஆகவே, தேசிய நல்லிணக்கம் உள்ளவர்களிடம் அரசியல் பலமும் இருந்தால் பல விடயங்களை சாதித்திருக்கலாம். எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதிக்க முடிந்ததா?
எனவேதான் தேசிய நல்லிணக்கமுள்ளவர்களிடம் அரசியல் பலம் வேண்டும்.” என தெரிவித்தார்.