தமிழ்நாட்டில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த மருத்துவமனை ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மசூத்தின் மனைவி சோபியாவுக்கு, 6ம் தேதி வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது.
முன்னதாக பிரசவ வலி ஏற்பட்ட போது மழை வெள்ளம் காரணமாக அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
சாலையில் தேங்கிய மழைநீரால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில், மீன்பாடி வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சோபியாவின் குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டது.
குழந்தையின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அதை பிரேத பரிசோதனை செய்து தருவதற்கு பரிசோதனை கூடத்தில் பணம் கேட்டதாக மசூத் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை முடித்து அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்தது சர்ச்சையை உருவாக்கியது.
இவ்விஷயத்தில் அட்டைப் பெட்டியில் குழந்தை உடலை வைத்து கொடுத்தது குறித்தும், லஞ்சம் கேட்டது குறித்தும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.