அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் அதிக விலையில் இலங்கை அரசாங்கம் சூரிய காற்றாலை மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமான யுனைடெட் சோலார் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
கிளிநொச்சி பூநகரியில் இடம்பெறவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக மின் கட்டணம் குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கும் சூழலில் சூரிய சக்தி மின்சாரம் ஒரு யுனிட்டை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் மேலும் கட்டண அதிகரிப்பே ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
என்றாலும், அநுரகுமார திஸாநாயக்க எம்.பியின் குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
யுனைடெட் சோலார் குழும் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இங்கு பூநகரி குளத்தின் மேற்பரப்பில் உருவாக்கப்படும் சூரிய சக்தி காற்றாலைகள் ஊடாக மின்சாரத்துக்கு மேலதிகமாக, விவசாயத்துக்கும் நீரை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று ஆசியாவில் பெரிய பேட்டரி ஆற்றல் சேமிப்பும் இங்கு இடம்பெற உள்ளது.
மின்சார சபையின் பொறியியலாளர்கள் பலர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர, “இந்த ஒப்பந்தத்தின் மூலம், 1,500MW பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புடன் 700MW சூரிய மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படும்.
1,727 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
யுனைடெட் சோலார் குழுமத்தின் உள்ளூர் துணை நிறுவனமான யுனைடெட் சோலார் எனர்ஜி ஸ்ரீலங்கா (பிரைவேட்) லிமிடெட், திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, பூநகரி குளத்தைச் சுற்றி கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கவும் குளத்தை புனரமைக்கவும் 13.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 03 தடுப்பணைகளை அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
வடமாகாண சபை, வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து 700 மெகாவாட் மின்சார உற்பத்தியை மேற்கொள்ள 35 வருட குத்தகை ஒப்பந்தத்தில் குறித்த நிறுவனத்திற்கு 1080 ஏக்கர் ஆழமற்ற குளத்தை வழங்குவதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளன.
அதன்படி, யுனைடெட் சோலார் எனர்ஜி ஸ்ரீலங்கா (பிரைவேட்) லிமிட்டெட் சமர்ப்பித்த திட்டப் பிரேரணையை கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதற்கும் மேற்படி பிரேரணையை மதிப்பீடு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்க்கும் குழுவை நியமிப்பதற்கு கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.