வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அரசாங்கம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றதுடன், போராட்டக்காரர்களால் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

“நாட்டில் வாழும் மக்கள் என்ற வகையில் தொடர்ச்சியாகவே எமக்கு இங்கு பாதுகாப்பில்லை. மனித உரிமையினை மீறும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

நீரியல்வளங்கள்,நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவதுடன் அதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றது.

குறிப்பாக வட பகுதியில் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கல், இராணுவ சோதனை தடுப்பு அரண்கள்,மக்கள் மீள்குடியேற்றப்படாமை போன்றவற்றால் நாம் பெரும் சவாலை எதிர்நோக்கின்றோம்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், போதைப்பொருள் பாவனை, சமூர்த்தி கொடுப்பனவுகள் சரியான முறையில் கிடைக்கபெறாமை போன்றவற்றில் நாம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றோம்.

அதிலும் நாட்டின் முதலீட்டை அதிகரித்தல் என்ற ரீதியில் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி சில திட்டங்களை வடக்கு கிழக்கில் அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது.

மக்களை பற்றிய சிந்தனையுடன் அரசாங்கமே செயற்படாத பட்சத்தில், அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள்?

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளே அதிகம் இடம்பெறுகின்றன.

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வடக்கு கிழக்கில் காணப்பட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin