முள்ளிவாய்க்கால் தூபி குறித்து பேஸ்புக்கில் பதிவு போட்டவரிடம் விசாரணை

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இணையத்தில் அவதூறு பரப்பியமை தொடர்பிலேயே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் ரங்கநாதன் கபிலன் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன்

பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில் உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த நபர் சமூக ஊடக வெளியில் நன்கு அறியப்பட்டவர் என்பதுடன் சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருவதுடன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அச்சமின்றி சமூக ஊடகப் பதிவுகள் மூலம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் உள்ளிட்ட இருவர் மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் போடப்பட்ட முகநூல் பதிவு தொடர்பாகவே பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN