சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல – சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளியில் வந்து கூறுவார்களா? – சவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!
சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல.
நாடாளுமன்றத்துக்குள் சிறப்புரிமையை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்துபவர்கள் பொது வெளியில் வந்து அவற்றை கூறுவார்களா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் (10.11.2023) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
தென்னிலங்கையை சேர்ந்த பேராசிரியர் ரொஹான் குணவர்த்தனவை மலேசியாவில் சந்தித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நான் பிளவுபடுத்துவேன் எனவும் ராஜபக்ஷக்கள் கொடுக்கும் நிகழ்ச்சி நிரலை முழமையாக செயற்படுத்தவதாகவும் கூறி தனது சொந்த நலன்களை நிறைவேற்றி தரவேண்டும் என்றும் இரந்து மண்டியிட்டு நின்றவர்களை பற்றி எம்மால் பொதுவெளியில் பகிரங்கப்படுத்த முடியும்.
ஆனால், அவ்வாறான தரங்குன்றிய இழிவான அரசியலை செய்பவர்கள் நாம் அல்ல.
நாடாளுமன்றத்தில் அநாகரீகமாகவும் சிறப்புரிமையை பயன்படுத்தியும் அவதூறுகளையும் இழிசொற்களை பயன்படுத்தும் இவ்வாறான உறுப்பினர் தேர்தலை இலக்குவைத்து நாடாளுமன்றத்தினுள் கூச்சலிவதை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவம் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.