“நுழைவுச் சீட்டு மோசடி… லூவ்ர் அருங்காட்சியகம் அதிர்ச்சி!” – 10 மில்லியன் யூரோக்கள் சுருட்டல்?
பாரிஸ் நகரின் உலகப் புகழ்பெற்ற Musée du Louvre (லூவ்ர் அருங்காட்சியகம்) நுழைவுச்சீட்டு விற்பனையில் நடந்த மெகா மோசடி விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 9 பேரும் தற்போது நீதிமன்றக் கண்காணிப்பு(Contrôle judiciaire) அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பல் நீண்ட காலமாகத் திட்டமிட்டு இந்த ஏமாற்று வேலையைச் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அருங்காட்சியகத்தில் வேலை செய்யும் சில ஊழியர்களும், சீனாவைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிகளும் (Guides touristiques) இதில் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டுகளை மீண்டும் பயன்படுத்துவது மூலமும், கணக்கில் வராத அளவுக்குச் சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதிப்பதன் மூலமும் இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கும்பலால் அருங்காட்சியகத்திற்குச் சுமார் 10 மில்லியன் யூரோக்கள் (10 millions d’euros) அளவுக்கு இழப்பு (Préjudice) ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மிகப் பெரிய தொகையாகும்.
காவல்துறையினர் நடத்திய சோதனையில் (Perquisitions), இவர்களிடமிருந்து கணக்கில் வராத 9,57,000 யூரோக்கள் ரொக்கமாகவும், வங்கிக் கணக்கிலிருந்த 4,86,000 யூரோக்கள் முடக்கவும் செய்யப்பட்டுள்ளன. மேலும், மூன்று சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணை நீதிபதிகள் இவர்கள் அனைவர் மீதும் முறையான குற்றச்சாட்டுப் பதிவு செய்திருந்தாலும், அவர்களைச் சிறையில் அடைக்காமல், கடுமையான நிபந்தனைகளுடன் வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

