வவுனியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நண்பராக இருந்து பிரிந்து சென்ற நபர்
சம்பவத்தில் உயிரிழந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பின்னர் பிரிந்து சென்ற நண்பரே இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா, தோணிக்கல்லில் வீடு புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்குத் தீயிட்டது.

சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக 21 வயது இளம் குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 10 பேர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அதில் எரிகாயங்களுக்குள்ளான உயிரிழந்த குடும்பப் பெண்ணின் கணவனும் உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் பலரிடமும் வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor