அராலி மத்தியில் சட்டவிரோத மண் அகழ்வு! தகவல் வழங்கியும் தாமதித்து வந்த வட்டுக்கோட்டை பொலிஸார்!

இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட கனரக (டிப்பர்) வாகனம் ஒன்று கிராம சேவகர் மற்றும் ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் 5 கனரக வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
அதிகாலை வேளையில் அராலி மத்தி பகுதியில் உள்ள வயல்களுக்கு அண்மையில் உள்ள மண் பிட்டி ஒன்றில், சட்டவிரோத மண் அகழ்வு கும்பல் ஒன்று மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
இதன்போது வயலுக்கு சென்ற ஊரவர் சிலர், “அனுமதி எடுத்தா மண் அகழ்கின்றீர்கள்” என கேட்டவேளை “ஆம், அனுமதி எடுத்துவிட்டு காவல்துறையினருக்கும் சொல்லி விட்டுத்தான் மண் அகழ்கின்றோம். அத்துடன் 12 மணிக்கு முதல் மண்ணினை அகழ்ந்து ஏற்றிச் செல்ல வேண்டும்” என என கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரவர்கள் சென்றுவிட்டனர்.
இதன்பின்னர் அவ்விடத்திற்கு வந்த அந்த ஊர் இளைஞர்கள் “யாரை கேட்டு மண் அகழ்கின்றீர்கள்? அனுமதி எடுத்தா மண் அகழ்கின்றீர்கள்?” என வினவினர். அதற்கு அவர்கள் “ஆம், அனுமதி எடுத்துத்தான் அகழ்கின்றோம் என்றனர். “அப்படியானால் அனுமதிப் பத்திரத்தை காண்பியுங்கள்” என. கேட்டனர். ஆனால் அந்த கும்பலால் அனுமதிப்பத்திரம் காண்பிக்கப்படவில்லை.
அதனையடுத்து ஊர் இளைஞர்கள் கிராம சேவகருக்கு தகவல் வழங்கினர். அதனடிப்படையில் குறித்த பகுதிக்கு கிராம சேவகர் விரைந்து சென்றார். கிராம சேவகர், அனுமதிப் பத்திரத்தை காண்பிக்குமாறு கூறியவேளை அவர்களிடம் அனுமதிப்பத்திரம் இல்லாத விடயம் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வாகனங்கள் தப்பிச் செல்ல ஆரம்பித்தன. இதன்போது கிராம சேவகரும் ஊர் இளைஞர்களும் இணைந்த அவற்றினை மறிப்பதற்கு முயற்சித்த வேளை அவர்களை மோதுவதற்கு குறித்த வாகனங்கள் வந்துள்ளன. இதன்போது அவர்கள் விலகிய போது இரண்டு ஜே.சி.பி வாகனங்கள் மற்றும் மூன்று டிப்பர்கள் தப்பிச் சென்றுள்ளன. ஒரு டிப்பர் மாத்திரம் சிக்கிக் கொண்டது.
இதன்போது கிராம சேவகரால் பல தடவைகள் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. அதன்பின்னர் கிராம சேவகர், சங்கானை பிரதேச செயலருக்கு அழைப்பு மேற்கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினார். அதன்பின்னர் தாமதமாகவே காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்து குறித்த டிப்பர் வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மண் அகழ்வின்போது அவ்விடத்தில் நின்ற பனை மரங்களும் பிடுங்கி வீசப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறித்த மண் பிட்டிக்கு மறு புறமாக கடல் காணப்படுகிறது. மழை நேரங்களில் கடல் நீர் வயல்களுக்குள் வராமல் குறித்த மண்பிட்டியே தடுப்பு அணையாக உள்ளது.
இந்த மண் பிட்டியை அகழ்ந்தால் கடல் நீர் வயல்களுக்குள் வந்து பயிர்ச்செய்கை நாசமாகிவிடும் என விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் சுமார் 35 டிப்பருக்கும் மேற்பட்ட மண் அதிகாலை வேளை அகழப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN