ஆலய விக்கிரகம் உள்ளிட்ட பெறுமதியான பல பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவத்துகொட, அரம்பேபொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரான ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசிரிவி காட்சிகளால் சிக்கிய பூசகர்
இந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. இந் நிலையில் கடந்த 21 ஆம் திகதி வத்தேகம பிடியேகெதர பகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சிசிரிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளில் அவர் ஆலயம் ஒன்றை நடத்தி வருபவர் என்பது தெரியவந்தது .
கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , பகமூன களுகங்கை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் மாத்தளை அலுவிஹாரே பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து கையடக்கதொலைபேசிகளையும் திருடியுள்ளார்.
அத்துடன், லக்கல பிரதேசத்தில் உள்ள பத்தினி ஆலயத்தில் இருந்து பெறுமதியான இரண்டு பத்தினி தெய்வச் சிலைகளையும் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் நீலமாணிக்ககல்லையும் திருடியமை தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்