யாழ்ப்பாணம் குப்பிழான் கிராமத்தில் சோழா நற்பணி மன்றத்தால் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்தோடு, நீண்ட காலமாக பழுதடைந்து காணப்பட்ட சில மின் விளக்குகளும் திருத்தப்பட்டுள்ளன.
வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இருந்து குப்பிழான் கிராமத்திற்குள் நுழையும் பிரதான வீதியில் தொடர்ந்து வழிப்பறி – கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறி வந்தன.
இதற்கு முக்கிய காரணமாக அந்த வீதியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமை அவதானிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த வீதியில் பொருத்தப்பட்ட ஒரு சில விளக்குகளும் ஒளிரவில்லை எனவும் பொது மக்களால் பல தரப்பினரிடமும் தெரிவிக்கப்பட்டபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் குப்பிழான் சோழா நற்பணி மன்றத்தின் கவனத்திற்கும் இக்குறைபாடுகள் பொது மக்களால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.
இதனைக் கருத்திற்கொண்டு முதற் கட்டமாக சோழா நற்பணி மன்ற உதவியுடன் அதன் ஒருங்கிணைப்பாளர் அ. ஜீவிதனினால் புன்னாலைக்கட்டுவனில் இருந்து கேணியடி ஞான வைரவர் ஆலயம் வரையான பகுதிகளுக்கு புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சில மின் விளக்குகளும் திருத்தப்பட்டுள்ளன.