பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் தன் வசப்படுத்தி உள்ளார். அந்நிறுவனத்தை வாங்கிய உடனே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்தார்.
மேலும் வரும் ஆண்டுகளில் டுவிட்டரில் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கிடையே டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செலவுகளை குறைக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாட்கள் மதிப்புள்ள பணி நீக்க ஊதியம் வழங்கப்படும். டுவிட்டரில் தற்போது 7,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் சுமார் 3,700 ஊழியர்களை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுவிட்டரை வாங்கிய நாள் முதல் எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடியை செயல்படுத்தி உள்ளார். பணி நீக்க நடவடிக்கைகளால் டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.