பிரான்ஸில் உயரதிகாரிகள் போல நடித்து ஏமாற்றும் மோசடி !!

பிரான்ஸில் உயரதிகாரிகள் போல நடித்து ஏமாற்றும் மோசடி !!

150 யூரோ பரிசு அட்டைகள் மூலம் நடக்கும் கொள்ளை

பிரான்ஸில் பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், ஊழியர்களைக் குறிவைத்து மேலதிகாரிகள் போல நடித்து ஏமாற்றும் ‘CEO மோசடி’ குறித்துப் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இளம்பெண் ஒருவருக்கு அவரது மேலதிகாரி பெயரில் வந்த மின்னஞ்சலில், குழுவினருக்குக் கிறிஸ்மஸ் பரிசு வழங்குவதற்காகத் தலா 150 யூரோ பெறுமதியான ஒன்பது பரிசு அட்டைகளை (Gift Cards) அவசரமாக வாங்கித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மொத்தமாக 1,350 யூரோ மதிப்பிலான அந்த அட்டைகளை உள்ளூர் கடையில் வாங்கி, அதன் பின்புறமுள்ள இரகசியக் குறியீடுகளைச் சுரண்டிப் புகைப்படம் எடுத்து இரசீதுகளுடன் அனுப்புமாறு அந்தப் போலி மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வங்கிப் பரிமாற்றம் மூலம் முழுப் பணத்தையும் திருப்பித் தருவதாகவும், உதவிக்காக மேலதிகச் சன்மானம் வழங்குவதாகவும் நம்பவைக்க முயன்ற போதிலும், குறியீடுகளின் புகைப்படங்களை அனுப்புவது மோசடிக்காரர்களிடம் நேரடியாகப் பணத்தை ஒப்படைப்பதற்குச் சமமாகும்.

 

தனிப்பட்ட முறையில் இத்தனை பெரிய தொகையைச் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த குறித்த இளம்பெண், மோசடியைச் சரியான நேரத்தில் உணர்ந்து பெரும் இழப்பிலிருந்து தப்பியுள்ளார்.

 

தொழில்நுட்பத் திறன்களை விட உளவியல் ரீதியான கையாளுதலையே இந்தக் கும்பல் அதிகம் பயன்படுத்துகிறது; தொழில்முறைச் சமூக வலைத்தளங்கள் மூலம் நிர்வாகிகள் மற்றும் எளிதில் செல்வாக்கு செலுத்தக்கூடிய இளம் அல்லது புதிய ஊழியர்களின் விவரங்களை இவர்கள் சேகரிக்கின்றனர்.

 

அதிகாரத் தோரணையைப் பயன்படுத்தி ஊழியர்களை அவசரமாகச் செயல்பட வைத்துப் பணத்தைச் சுருட்டுவதே இத்தகைய மோசடிகளின் பிரதான நோக்கமாக உள்ளது.

 

பண்டிகைக் காலங்களில் இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பிக்க, அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரியை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்; குறிப்பாக ‘@gmail.com’ போன்ற முகவரிகளிலிருந்து வரும் கோரிக்கைகள் எப்போதும் சந்தேகத்திற்குரியவை ஆகும்.

 

எந்தவொரு கொள்வனவையோ பணப் பரிமாற்றத்தையோ மேற்கொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட மேலதிகாரியை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Recommended For You

About the Author: admin