பிரான்ஸ் சிறைகளில் வரலாறு காணாத நெருக்கடி!!!
90,000-ஐத் தாண்டிய கைதிகளின் எண்ணிக்கை!
பிரான்ஸ் நாட்டின் சிறைகளில் இடநெருக்கடி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து,
அங்குள்ள கைதிகளின் எண்ணிக்கை 90,937 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டுடன் (84,862 கைதிகள்) ஒப்பிடுகையில் கைதிகளின் எண்ணிக்கை 7.2% உயர்ந்துள்ள போதிலும், நாட்டின் மொத்த சிறை வசதிகள் வெறும் 63,452 இடங்களுக்கு மட்டுமே சாத்தியமாக உள்ளது.
போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், சிறைத் தரையில் மெத்தைகளை போட்டுத் தூங்கும் கைதிகளின் எண்ணிக்கை 8,959 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 52% அதிகமாகும்.
விசாரணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் குறுகிய காலத் தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்படும் காவற்கூடங்களில் இடநெருக்கடி விகிதம் 178% ஆக பதிவாகியுள்ளதுடன், நாட்டின் ஒட்டுமொத்த சிறை நிரம்பல் விகிதம் 143.3% ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் சிறைகளின் இந்த மோசமான நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐரோப்பிய கவுன்சில், சுகாதாரச் சீர்கேடு மற்றும் வன்முறைகள் காரணமாக இச்சிறைச்சாலைகள் மனிதப் பொருட்கள் சேமிப்புக் கிடங்காக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
பிரான்ஸின் சிறைச்சாலை அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு பழமையான உள்கட்டமைப்புகள் மற்றும் காவலர்களின் கடுமையான பற்றாக்குறையே காரணம் என சிறை கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் சிமோனட் தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, பதவிக் காலம் முடிவடைந்த டொமினிக் சிமோனட்டுக்கு பதிலாக, வின்சி மோட்டோவேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான Pierre Coppey புதிய கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தச் சிறை நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு,Troyes பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நவீன Modular சிறைச்சாலைகள் மூலம் 3,000 புதிய இடங்களை உடனடியாக உருவாக்க நீதி அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் 15,000 புதிய சிறை இடங்களை உருவாக்கத் தொடங்கப்பட்ட தேசியத் திட்டத்தில், இதுவரை 8,000 இடங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய கவுன்சிலின் தரவுகளின்படி, ஐரோப்பாவிலேயே சிறைகளில் மிக மோசமான இடநெருக்கடி கொண்ட நாடுகளில் துருக்கியுடன் இணைந்து பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

