வீட்டிற்குள் இரகசியமாக புதையல் தோண்டிய மூவர் கைது

வீடொன்றிற்குள் மிகவும் நுணுக்கமாகவும் இரகசியமாகவும் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் இன்று (14ஆம் திகதி) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அந்த வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தம்புத்தேகம, பிலிபேவ பகுதியில் உள்ள வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள வீட்டிலேயே இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டின் சமையலறையினுள் 4.5 x 5.5 அடி அளவிலும், சுமார் 20 அடி ஆழத்திலும் சுரங்கம் போன்ற குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.
அதிலிருந்து எடுக்கப்பட்ட மண், வீட்டின் அறை ஒன்றிற்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் புலனாய்வு விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பெண்ணும் மற்றைய ஆணும் இந்த புதையல் தோண்டும் பணிக்காக பணம் செலவிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து நீர் மோட்டார், நீர் குழாய், கம்பி சுருள் , மண்வெட்டி மற்றும் மண் தோண்டுவதற்கும், மண்ணை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த புதையல் தோண்டும் பணிக்கான ஆலோசனைகளை வழங்கி, அதனை வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் கல்கமுவ, எஹெட்டுவெவ காவல் அதிகாரப் பிரிவில் வசிக்கும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம தீர்க்கப்படாத குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin