மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, அரச சேவையை மேலும் வினைத்திறனானதாகவும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்ற தேசிய மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையேற்றார். இரண்டாம் நாள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மாநாட்டில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களால் அங்கீகரிக்கப்படும் அவசர பாலங்கள், வீதிகள் மற்றும் கட்டடப் புனரமைப்புப் பணிகளை மத்திய அரசின் இறுதி அனுமதிக்காக காத்திருக்காமல் முன்னெடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்த நிதி ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
மேலும், யுத்தத்தால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை அடுத்த ஆண்டுக்குள் மீள்குடியேற்றும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
முறையற்ற வகையில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்து அவற்றை நிறைவு செய்வது, காணி அபிவிருத்தியின் போது வனப் பாதுகாப்பு வலயங்களை பாதுகாப்பது, மற்றும் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவது அரசின் முன்னுரிமைகளாகவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் காணப்படும் நிர்வாகச் சிக்கல்கள், அதிகாரிகளின் இடமாற்றப் பிரச்சினைகள், எரிபொருள் கொடுப்பனவுகள், அஸ்வெசும நலத்திட்டம், விவசாயிகளுக்கான வரிச் சலுகைகள் மற்றும் அரச காணி குத்தகை அனுமதிகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு, விரைவான தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்டங்களின் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தி, அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு வேகமான மற்றும் தரமான சேவையை வழங்க அனைத்து அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

