நெடுநாளாகக் காத்திருந்த வசதி: ஸ்மார்ட்போன்களில் வருகிறது Navigo வருடாந்திரப் பயணச்சீட்டு!
Île-de-France முழுவதும் தொடருந்துகளிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு சிறப்பான நற்செய்தி வெளியாகியுள்ளது.
பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பயணம் செய்யும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான Navigo வருடாந்திரப் பயணச்சீட்டை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வசதி இன்று (ஜூலை 2) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
Android திறன்பேசிகள் மற்றும் திறன் கடிகாரங்கள் வைத்திருப்பவர்கள் இனி தங்கள் கைபேசியையே பயணச்சீட்டாகப் பயன்படுத்தலாம் என Île-de-France Mobilités (IDFM) மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
சுமார் 1.3 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்தத் திட்டம் ஜூலை மாத மையப்பகுதிக்குள் படிப்படியாக அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும். முதியோர்களுக்கான சிறப்புப் பயணச்சீட்டுகளுக்கும் இந்த வசதி பொருந்தும். iPhone பயனர்களுக்கு வருகிற 2026 செப்டம்பர் மாதமும், Imagine R மாணவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2027 செப்டம்பர் மாதமும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே Pass Liberté +, தினசரி மற்றும் மாதாந்திரப் பயணச்சீட்டுகளுக்கு இந்த வசதி இருந்த நிலையில், தற்போது வருடாந்திரப் பயணச்சீட்டுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது பயணிகளிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாதாரண அட்டையிலிருந்து கைபேசிக்கு மாறுவது மிகவும் எளிமையானது. இதற்காக IDFM தளத்தில் உங்களின் தனிப்பட்ட கணக்கிற்குச் சென்று, “mes contrats sur mon téléphone” என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “transférer on Navigo annuel” என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தற்போதைய அட்டையைக் கைபேசியின் பின்புறம் வைத்து ஸ்கேன் செய்ய வேண்டும். இதன் மூலம் பழைய அட்டை செயலிழந்து, புதிய டிஜிட்டல் அட்டை உங்கள் கைபேசியில் உடனடியாகச் செயல்படத் தொடங்கிவிடும். இந்த ஒட்டுமொத்தச் செயல்முறையையும் இரண்டு நிமிடங்களுக்குள் செய்து முடித்துவிடலாம்.
பயணச்சீட்டு மோசடிகள் மூலம் போக்குவரத்துத் துறைக்கு ஆண்டுக்கு 700 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படுவதால், ஒரே நேரத்தில் அட்டை மற்றும் கைபேசி என இரண்டிலும் பயணச்சீட்டைப் பயன்படுத்த IDFM அனுமதிக்கவில்லை.
ஒருவேளை கைபேசியைப் பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிரமம் இருந்தால், இணையத்தளம் மூலமாக “gérer mon forfait en ligne” என்ற பகுதிக்குச் சென்று, மீண்டும் பழையபடி சாதாரண அட்டையையே பயன்படுத்தும் வசதியும் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

