போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையில் பயணிகள் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறியும் விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று ஹொரண பிரதான பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹொரண, இங்கிரிய, மொரகஹஹேன மற்றும் அக்குருவாதொட்ட ஆகிய காவல்துறை நிலையங்களின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, ஹொரண நகரில் இருந்து சேவையில் ஈடுபடும் மற்றும் நகரூடாகச் செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் என மொத்தம் 151 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் போதைப்பொருள் பாவனையில் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சாரதிகள் செலுத்தி வந்த நான்கு பேருந்துகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்கள் 34 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் குடாவோடுப, பெல்லபிட்டிய, கலுகஹஹின்ன, கோவின்ன மற்றும் எகொடைஹேன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

