பிரெஞ்சு தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவந்த ‘ஊதியத்துடன் கூடிய விடுமுறை’!

பிரான்சில் 90 ஆண்டுகளுக்கு முன்: பிரெஞ்சு தொழிலாளர்களின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவந்த ‘ஊதியத்துடன் கூடிய விடுமுறை’!

பிரெஞ்சு தொழிலாளர்களின் உரிமைகளில் ஒரு மாபெரும் மைல்கல்லாகக் கருதப்படும் ‘ஊதியத்துடன் கூடிய விடுமுறை’ (Congés payés) அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) சரியாக 90 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தற்காலப் பணியாளர்களுக்கு இது ஒரு சாதாரண உரிமையாகத் தோன்றினாலும், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் நிலைமை அவ்வாறு இருக்கவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் இந்த விடுமுறை உரிமை எவ்வாறு சாத்தியமானது என்ற வரலாற்றுத் திருப்பத்தின் சுருக்கம் இதோ.

 

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்குச் சில வாரங்கள் விடுமுறையில் செல்வதெல்லாம் எட்டாக்கனியாகவே இருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையை விட உழைப்பிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; ஓய்வின்றி உழைப்பது மட்டுமே அன்றாடப் பழக்கமாக இருந்தது.

 

இடைவிடாத இந்த உழைப்பால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வடைந்த தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது. இதன் விளைவாக, ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை உரிமையைக் கோரி வீதிகளில் மாபெரும் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்தன.

 

வரலாற்றை மாற்றிய மாட்டிஞோன் ஒப்பந்தம் (Accords de Matignon)

 

தொழிலாளர்களின் இந்த எழுச்சியைத் தொடர்ந்து, லியோன் ப்ளூம் (Léon Blum) தலைமையிலான ‘மக்கள் முன்னணி’ (Front Populaire) அரசாங்கம், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்தது.

 

பொதுவெளியில் போராட்டங்கள் தொடங்கி 7 வாரங்கள் கடந்த நிலையில், 1936-ஆம் ஆண்டு ஜூன் 7 -8 (நள்ளிரவில்)இதற்கான ஒப்பந்தம் மாட்டிஞோன் (Matignon) மாளிகையில் கையெழுத்தானது. இதில் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை 7 முதல் 15 விழுக்காடு வரை உயர்த்துவது, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஜூன் 20 அன்று, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் சட்டம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நெடிய போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.

 

படிப்படியான விடுமுறை நீட்டிப்பு

 

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இது மீண்டும் அரசியல் விவாதங்களின் மையப்பொருளாக மாறியது:

 

1956-ஆம் ஆண்டில்: மூன்றாவது வாரத்திற்கான விடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 

1968-ஆம் ஆண்டில்: நான்காவது வாரத்திற்கான விடுமுறை வழங்கப்பட்டது.

 

1982-ஆம் ஆண்டில்: இன்றுவரை பிரான்சில் நடைமுறையில் உள்ள புகழ்பெற்ற ‘ஐந்து வார கால ஊதியத்துடன் கூடிய விடுமுறை’ (Cinq semaines de congés payés) சட்டபூர்வமாக்கப்பட்டது.

 

இவ்வாறு வழங்கப்பட்ட ஐந்து வார விடுமுறையானது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிரெஞ்சு மக்களைக் கோடைக்காலச் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளத் தூண்டியது. கடலோர நகரங்களும், சூரிய ஒளி நிரம்பிய ஓய்வுத் தலங்களும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

 

1976-ஆம் ஆண்டில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பெண் தொழிலாளி ஒருவர் அந்த ஆச்சரியத்தைப் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்: “15 நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டுத் திரும்பிய பின்னரும் அதற்கான சம்பளம் அப்படியே கிடைக்கும் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை!”

 

ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஆண்டுதோறும் சுமார் 3.5 கோடி (35 மில்லியன்) பிரெஞ்சு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். (ஒப்பீட்டளவில், 1966-ஆம் ஆண்டில் இது 2.1 கோடியாக மட்டுமே இருந்தது). எனினும், விடுமுறைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், போதிய பொருளாதார வசதியின்மை காரணமாக இன்றும் 42 விழுக்காடு மக்கள் விடுமுறைச் சுற்றுலா செல்ல முடியாத நிலையிலேயே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

Recommended For You

About the Author: admin