பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணைகளில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம், கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முந்தைய வழக்கமான கால அட்டவணைக்கேற்ப கல்விப் பொதுப் பரீட்சைகள் மற்றும் பாடசாலைத் தவணைகள் மீளமைக்கப்படவுள்ளன.
இந்த விபரத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பாடசாலைகளை அடிக்கடி மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தீர்மானத்தின்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L) வழக்கம்போல டிசம்பர் மாதத்திலும், உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படவுள்ளன.
அத்துடன், பாடசாலைத் தவணைகளிலும் அதற்கு ஏதுவாக மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இந்தப் புதிய கால அட்டவணைக்குக் கல்வித் திட்டத்தைச் சீராகக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, நடப்பு ஆண்டின் எஞ்சியுள்ள இரண்டு பாடசாலைத் தவணைகளின் போதும் மாணவர்களுக்கு நீண்ட விடுமுறைகளை வழங்குவதற்கும் கல்வி அமைச்சு விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் மூலம் கல்விப் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் உரிய காலப்பகுதியில் தாமதமின்றி நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

