பிரான்சில் ஒரு சதுர மீட்டர் அறையில் அடைக்கப்பட்ட 9 வயதுச் சிறுவன் – வளர்ப்புத் தந்தை கைது!
பிரான்சின் தென்கிழக்குப் பகுதியான வோக்லூஸ் (Vaucluse) மாவட்டத்தில் உள்ள மெரிண்டோல் (Mérindol) கிராமத்தில், ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் ஒரு சதுர மீட்டர் (1 m²) அளவேயான மிகச் சிறிய இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மீட்கப்பட்ட அந்தச் சிறுவன் தனது தாய், மூன்று சகோதரர்கள் மற்றும் வளர்ப்புத் தந்தையுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளான்.
வீட்டின் ஒரு சிறிய சேமிப்பு அறையில் இந்தச் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டுள்ளான்.
முற்றிலும் இருள் சூழ்ந்த அந்த அறையிலேயே தரையில் தூங்கி, தரையிலேயே சாப்பிட்டு, அங்கேயே தனது மலஜலத்தைக் கழிக்கும் மிகக் கொடூரமான நிலையில் அவன் வாழ்ந்துள்ளான்.
தனது மற்ற சகோதரர்களைப் போல அவனுக்குச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து சாப்பிடக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பகலில் இந்தச் சிறுவனைக் கண்ட பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர், அவனது மிகவும் மெலிந்த தோற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக விரைந்து வந்த காவல் துறையினர், கடந்த மே 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வீட்டைச் சோதனையிட்டபோதுதான், ஒரு சதுர மீட்டர் அறைக்குள் சிறுவன் அடைக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் உண்மையை நேரில் கண்டனர்.
சிறுவனை வதைத்த வளர்ப்புத் தந்தை உடனடியாகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மே 24-ஆம் தேதி நீதிமன்றக் காவலில் (Détention provisoire) சிறையில் அடைக்கப்பட்டார். 15 வயதுக்குட்பட்ட சிறுவனுக்கு உணவளிக்காமல் வதைத்தது மற்றும் வன்முறையைக் கையாண்டது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், சிறுவனின் தாய் எங்கு உள்ளார் என்பது குறித்தோ, அவர் மீதான நடவடிக்கை குறித்தோ அரசுத் தரப்பு வழக்கறிஞர் எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை.
கொடூரமான நிலையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன், தற்போது அரசின் பாதுகாப்பில் நம்பத்தகுந்த ஒரு காப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். அவனுக்கும் அவனது மற்ற சகோதரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்குவதற்கான உளவியல் மற்றும் சமூக மதிப்பீடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு அல்சாஸ் (Alsace) பகுதியில் 9 வயதுச் சிறுவன் ஒருவன் தனது தந்தையின் வேனில் மாதக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொடூரம் நிகழ்ந்த நிலையில், மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் பிரான்சில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

