ஐரோப்பிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமை: முழுமையான சுதந்திரமா? அல்லது மறைமுகத் தடையா? ஓர் அதிர்ச்சி அறிக்கை!

ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் கருக்கலைப்புக்குச் (Interruption Volontaire de Grossesse – IVG) சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும், நடைமுறையில் பல நாடுகளில் இது இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது. ஒரு நாடு பெண்களுக்கு முழு உரிமை அளிக்கும்போது, மற்றொரு நாடு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

ஐரோப்பாவில் கருக்கலைப்பு உரிமை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த வியப்பூட்டும் தகவல்கள் இதோ:
25 நாடுகளின் சுதந்திரம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 25 நாடுகள், பெண்கள் எந்தக் காரணமும் தெரிவிக்காமல் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றன. எனினும், இதற்கான காலவரம்பு நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது:

நெதர்லாந்து: அதிகபட்சமாக 24 வாரங்கள் வரை அனுமதி உண்டு.

பிரான்சு: 2022-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி 14 வாரங்கள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல்: இங்கு 10 வாரங்கள் வரை மட்டுமே அனுமதி.

ஜெர்மனி: இங்குள்ள சட்டம் சற்று விசித்திரமானது. ஜெர்மன் குற்றவியல் சட்டப்படி கருக்கலைப்பு என்பது தத்துவார்த்த ரீதியாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால், 12 வாரங்களுக்குள் செய்தால் எவ்விதத் தண்டனையும் வழங்கப்படுவதில்லை என்ற நடைமுறை அங்குப் பின்பற்றப்படுகிறது.

கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நாடுகள்

போலந்து மற்றும் மால்டா ஆகிய இரண்டு நாடுகளும் கருக்கலைப்பைக் கடுமையாக எதிர்க்கின்றன:
போலந்து: பாலியல் வன்கொடுமை அல்லது தாயின் உயிருக்கு ஆபத்து ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே இங்கு அனுமதி உண்டு.

கருவில் உள்ள குழந்தைக்குக் கடுமையான குறைபாடு இருந்தாலும் கூடக் கருக்கலைப்பு செய்ய முடியாது. இதனால் இங்குக் கருக்கலைப்பு என்பது கிட்டத்தட்ட முழுமையாகத் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே உள்ளது.

மால்டா: 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் இங்கு முதல்முறையாகக் கருக்கலைப்புக்கே அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே சாத்தியம் என்ற மிகக் கடுமையான நிபந்தனையுடன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் மறுப்பும், அதிகரிக்கும் ரகசியக் கருக்கலைப்புகளும்

சட்டம் அனுமதித்தாலும், பல நாடுகளில் பெண்கள் இந்த உரிமையைப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது.

மனசாட்சி உரிமை (Objection de conscience): மதம் அல்லது தனிப்பட்ட அறநெறிக் காரணங்களைக் காட்டி, மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுக்கலாம் எனப் பிரான்சு உட்பட 23 நாடுகள் சட்டபூர்வமாக அனுமதிக்கின்றன (சுவீடன், பின்லாந்து, லிதுவேனியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே மருத்துவர்கள் மறுக்க முடியாது).

இத்தாலியின் அவலம்: இத்தாலியில் 70 சதவீத மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய மறுக்கின்றனர் (சில மாகாணங்களில் இது 92 சதவீதமாக உள்ளது!). இதனால் அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் ரகசியமான முறையில், ஆபத்தான கருக்கலைப்புகளைச் செய்யத் தள்ளப்படுகிறார்கள்.

மன உளைச்சலைத் தரும் சட்டங்கள்: ஹங்கேரியில், கருக்கலைப்புக்கு முன் குழந்தையின் இதயத் துடிப்பைத் தாய் கட்டாயம் கேட்க வேண்டும் என்ற புதிய சட்டம் 2022-ல் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரான்சின் வரலாற்றுச் சாதனை

உலக நாடுகளுக்கு ஒரு முன்னோடியாக, கடந்த மார்ச் 4, 2024 அன்று பிரான்சு ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. கருக்கலைப்பு உரிமையைத் தனது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலேயே (Constitution) இணைத்து, உலகிலேயே இந்தச் சாதனையைச் செய்த முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.

ஸ்பெயின் நாடும் இதே வழியைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத் திட்டம்:

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம், “பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை” என ஐரோப்பிய அடிப்படை உரிமைகள் சாசனத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin